சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் 15-ம் தேதி தொடங்கி வைத்திருந்தார். இதன் மூலம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஷிப்ட் அடிப்படையில் பணி செய்து வரும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு காலை, மாலை, இரவு என 3 வேளைகளிலும் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது.
காலை உணவில் இட்லி, பொங்கல், கிச்சடி போன்றவையும், மதியம் கலவை சாதம், ரசம், சாம்பார், கூட்டு, பொரியல். இரவில் சப்பாத்தி அல்லது ரொட்டி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி நேற்று திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் உள்ள போளிவாக்கம் ஊராட்சி அத்திக்குளம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் சென்னை உள்பட 25 மாநகராட்சிகள், 141 நகராட்சிகள், 479 பேரூராட்சிகளில் பணிபுரியும் 1 லட்சத்து 29 ஆயிரத்து 689 தூய்மை பணியாளர்களுக்கு சுகாதாரமான மற்றும் ஆரோக்கியமான உணவு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெப்பம் தாங்கும் பையில் வைக்கப்பட்ட உணவு கலன்களை தூய்மைப்பணியாளர்களுக்கு வழங்கினார். விழா மேடையில் தூய்மைப் பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஆவடி நாசர், மதிவேந்தன், ஜெகத்ரட்சகன் எம்.பி., தலைமைச் செயலாளர் முருகானந்தம், அரசு துறை செயலாளர் சத்தியபிரதா சாகு, மாநகராட்சி, நகராட்சி நிர்வாக ஆணையர் கார்த்திகேயன், மாவட்ட கலெக்டர் மு.பிரதாப், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், சந்திரன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.