பனப்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள டாடா மோட்டாா்ஸ் காா் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் சாா்பில், ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் துறை தொழிற்பூங்காவில் ரூ. 9,000 கோடி முதலீடு மற்றும் 5,000 நபா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை அமைக்க 28.09.2024 அன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். முதற்கட்ட பணிகள் முடிக்கப்பட்ட நிலையில். டாடா தொழிற்சாலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

டாடா நிறுவன கார் ஆலையை தொடங்கி வைத்து ரேஞ்ச் ரோவர் காரை முதல்வர் ஸ்டாலின் ஓட்டினார். காரை முதல்வர் ஓட்டிய நிலையில் டாடா குழும தலைவர் சந்திரசேகரன் முன் சீட்டில் அமர்ந்திருந்தார். தொடர்ந்து டாடா ஆலையை திறந்து வைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது,

ராணிப்பேட்டை, பணப்பாக்கத்தில் டாடா வாகன உற்பத்தி ஆலை திறப்பு, தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு பொன்னான நாள். தமிழகம் எந்த அளவுக்கு தொழில் செய்ய சிறந்த மாநிலம் என்பதற்கு இது சிறந்த உதாரணம். இந்தியாவின் வாகன உற்பத்தியின் தலைநகரம், மின் வாகன உற்பத்தியின் தலைநகரம் தமிழகம்தான். ரூ. 9 ஆயிரம் கோடியில் தொடங்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலையால் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது.

டாடாவுக்கும், தமிழகத்திற்கும் ஆழ்ந்த பிணைப்பு உள்ளது. தமிழகத்தின் தயாரிப்புகள் உலக தரத்தில் கிடைக்கும் என்பதற்கு உதாரணம்தான் இந்த ஆலை. சீரான, பரவலான, அனைவரையும் உள்ளடக்கிய மாநிலம் தமிழகம்தான். மற்ற மாநிலங்களுடன் போட்டி என்பதை தாண்டி உலக நாடுகளுடன் போட்டியிடும் நிலையில் தமிழகம் முன்னேறி உள்ளது.

தமிழக அரசு உறுதியளித்தால் எப்படி காப்பாற்றும் என்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர். அரசின் செயல்பாடுகளை எடுத்துக்காட்டும் வகையில் முதலீடுகள் செயல்பாட்டு மாநாட்டை விரைவில் நடத்தவுள்ளோம். ஏற்கனவே நாம் லீடராக இருக்கும் துறையில் இன்னும் சாதனைகள் செய்ய வேண்டும். எங்கள் நிறுவனத்துக்கு வேலைவாய்ப்பு தர எந்த நிறுவனங்கள் முன்வந்தாலும் வரவேற்போம். தமிழகத்தில் முதலீடு செய்ய அனைத்து உதவிகளையும் செய்வோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள் பங்கேற்றனர். இந்த தொழிற்சாலையில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 2 லட்சம் கார்களை தயாரிக்க டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.