சென்னை: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக தமிழகம் வர உள்ளார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து நாளை (16ம் தேதி) காலை தனிவிமானம் மூலம் சென்னை வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழத்தின் 22வது பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்து கொள்கிறார். அதன்பின்னர் சென்னை தி.நகரில் உள்ள வாணி மகாலில் நடைபெறும் நாகாலாந்து முன்னாள் கவர்னர் இல.கணேசனின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சியிலும், தொடர்ந்து தனியார் கல்லூரியில் நடக்கும் புத்தக வெளியிட்டு விழாவிலும் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார்.
அதன்பின்னர் 17ம் தேதி சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் புறப்பட்டு திருச்சி சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் வருகிறார். பின்னர் அங்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். இதையடுத்து தஞ்சையில் உள்ள தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதனை முடித்துவிட்டு திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு அன்றைய தினம் இரவு 8.30 மணிக்கு டெல்லி சென்றடைகிறார். துணை ஜனாதிபதி வருகையையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.