தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், கடந்த சில ஆண்டுகளாக தி.மு.க.வுடன் பயணிக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சி, தங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியில் வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், தி.மு.க. கூட்டணியில் நீடிப்பதால் கட்சிக்கு எந்த பலனும் இல்லை என்ற கருத்து வலுவாக முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் வாரிய பதவிகள் வழங்கப்படாதது மற்றும் வரும் தேர்தலில் மீண்டும் ஒரே ஒரு தொகுதியை மட்டுமே ஒதுக்க தி.மு.க. முன்வருவது வேல்முருகன் தரப்பை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியிருப்பதாகவே தெரிகிறது.
அதுமட்டுமல்லாது, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளுக்கு கூடுதல் தொகுதிகளை வழங்க முன்வரும் தி.மு.க., களத்தில் தீவிரமாக பணியாற்றும் தங்களுக்கு குறைந்த முக்கியத்துவம் அளிப்பது ஏன் என்று தொண்டர்கள் கேள்வி எழுப்புகின்றனர். வட மாவட்டங்களில் பா.ம.க.வுக்கு இணையான கட்டமைப்பை வைத்துள்ள தங்களை, மற்ற சிறிய கட்சிகளுடன் ஒப்பிட்டு பார்ப்பது நியாயமல்ல என்றும் அக்கட்சி தொண்டர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சூழலை சாதகமாக பயன்படுத்தி கொள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.