விழுப்புரம் கொள்ளாரில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியும், தேர்தல் வாக்குறுதிகளில் இல்லாத முத்திரை திட்டங்களை செயல்படுத்தியும் தமிழக மக்களின் கனவுகளை நிறைவேற்றி வருகிறோம். சட்டங்களையும், திட்டங்களையும் நிறுவேற்றுவது மட்டுமல்ல, தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தேவையையும் நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் அரசின் நோக்கம்.

திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறையை உருவாக்கி அதன் மூலம் தேர்தலுக்கு முன்பாக மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு கண்டோம். 2021-ம் ஆண்டு நவம்பர் அன்று முதல்வரின் முகவரி என்ற ஒருங்கிணைந்த புதிய துறையை உருவாக்கியதன் மூலம் மக்களிடம் இருந்து பெற்ற மனுக்களில் இதுவரை 1.49 கோடி மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

அரசு சேவைகளை பெறுவதில் மக்களுக்கு அலைச்சல் இருக்க கூடாது. என்னை பொறுத்தவரை அரசு என்பது 24 மணி நேரமும் மக்களுக்காக செயல்பட வேண்டும். அதன்படிதான் செயல்படுகிறோம். நாம் ஒருபுறம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக திட்டமிட்டு வந்தால் அந்த வளர்ச்சியை கெடுக்க மத்திய பா.ஜ.க. அரசும், அதன் கூட்டாளிகளும் பல செயல்களை செய்து வருகிறார்கள். அதற்கான சமீபத்திய உதாரணம்தான் மத்திய பட்ஜெட். இதுவரை ஒப்புக்கு சொல்லி வந்த திருக்குறள் கூட இம்முறை இல்லை.

தமிழகத்திற்கு தேர்தல் வரப்போகும் நிலையிலும் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை மத்திய பா.ஜ.க.அரசு புறக்கணித்துள்ளது. ஆந்திரா, ஒடிசாவில் தேர்தலின் போதாவது திட்டங்களை அறிவித்தார்கள். ஆனால் பெயருக்கு கூட தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு வளர்ச்சி திட்டமும் பட்ஜெட்டில் இல்லை. மத்திய அரசும், அதன் கூட்டாளிகளும் தமிழகத்தின் வளர்ச்சியை கெடுக்கும் அனைத்தையும் செய்கிறார்கள்.

மத்திய பா.ஜ.க.வுக்கு தேர்தல் ரிசல்ட் முன்கூட்டியே தெரிந்து விட்டது போலும். எப்படியும் தோற்கத் தான் போகிறோம்.இவர்களுக்கு எதற்கு நிதி என்று பட்ஜெட்டில் தமிழகத்திர்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கவில்லை. தமிழர்களின் மீதும், தமிழ்நாட்டின் மீதும் மத்திய பா.ஜ.க. அரசு கொண்டிருக்கிற வெறுப்பின் வெளிப்பாடாக மத்திய பட்ஜெட் இருக்கிறது. இவ்வாறு முதல்வர் பேசினார்.