2026-27 நிதியாண்டுக்கான மாநில இடைக்கால நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 17ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நிகழவுள்ளதையடுத்து தற்போதைய தி.மு.க. ஆட்சியின் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதை முன்னிட்டு, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ரூ. 34,000 கோடி மதிப்பிலான 15 தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதோடு 2026-27 நிதியாண்டுக்கான மாநில இடைக்கால நிதிநிலை அறிக்கைக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவைக் கூட்டத்துடன் 2026-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி காலை 9.30 மணிக்குக் கூடுகிறது. அன்றைய தினம் இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் வாசிப்பார். வரும் 20-ம் தேதி 2026-27 க்கான முன் பண மானியக் கோரிக்கை 2025-26க்கான கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கை அளிக்கப்படும். அலுவல் ஆய்வுக்குழு கூடிக் கூட்டத்தொடர் நடத்தப்படும் நாட்கள் அறிவிக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.