மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் புதுச்சேரியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய பட்ஜெட் இப்போது தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு கூடுதலாக 10 சதவீத நிதி கோரியுள்ளனர். இதன் பின்னர் தான் மாநிலம், யூனியன் பிரதேசத்துக்கு நிதி ஒதுக்கப்படும். புதுச்சேரியை நிதி கமிஷனில் சேர்க்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். புதுச்சேரியில் 800 ஏக்கரில் தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் 6 ஆயிரம் இளைஞர்கள் நேரடியாக வேலைக்கு சேர்ந்துள்ளனர். நீர்வழி போக்குவரத்தை மேம்படுத்த பிரதமர் கவனம் செலுத்தி வருகிறார்.
பிரதமரின் சென்னை வருகை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிகப்பெரும் பலம் அளித்துள்ளது. மீண்டும் பிரதமர் தமிழகம், புதுச்சேரிக்கு வருவார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வரும். பல கட்சிகளோடு பேசி வருகிறோம். தேர்தலுக்காக பட்ஜெட் தயாரிப்பவர்கள் பா.ஜ.க.வினர் அல்ல. நாட்டின் வளர்ச்சி, தொலைநோக்கு பார்வை, வளர்ச்சியடைந்த பாரதம் நோக்கி பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. 5 மாநில தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரும் வெற்றி பெறும். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைவது உறுதி செய்யப்பட்ட ஒன்று, எங்கள் கூட்டணி, வலுவான கூட்டணி, ஆட்சி அமைக்கும் கூட்டணி. இவ்வாறு அவர் கூறினார்.