தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
தூய்மைப் பணியாளர்கள் அதிகாலையே தங்கள் பணியைத் தொடங்க வேண்டிய சூழலில், பணிபுரியும் இடத்திற்கே உணவை எடுத்து வந்து சாப்பிடுவதில் பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதையடுத்து, சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளை உணவு வழங்கும் திட்டத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. காலை உணவில் இட்லி போன்றவை, மதியம் ரசம், சாம்பார், கூட்டு, இரவு சப்பாத்தி அல்லது ரொட்டி உள்ளிட்டவை அடங்கும். இந்த உணவுகள், ஊட்டச்சத்து நிறைந்தவையாக இருக்கும். இந்நிலையில் சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்தை 2025, நவம்பர் 15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன் ஒருபகுதியாக கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு இந்ததிட்டம், வருகிற 9-ம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கப்படுகிறது. இதனை முதல்வர் மு,க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். கோவை மாநகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 5 மண்டலத்திற்கு உட்பட்ட 100 வார்டுகளில், பணிபுரியும் பணியாளர்கள் இதன் மூலம் பயன்பெற உள்ளனர். நிரந்தர, தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், ஓட்டுநர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணியாளர்கள், பள்ளிகள் மற்றும் வார்டுகளில் கழிவறை பராமரிக்கும் பணியாளர்கள் என மொத்தம் 9 ஆயிரத்து 454 பணியாளர்கள் பயன்பெற உள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், இத்திட்டத்தை தொடங்கி வைத்ததும் ஒவ்வொரு நாளும் காலையில் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்படும். இந்த தகவலை கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.