சென்னை: தமிழக பட்ஜெட்டில் கூவம், அடையாறு நதிகள் சீரமைப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை பெருநகரப் பகுதியின் அபரிமிதமான வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, அதன் பரப்பளவை 5,904 சதுர கி.மீ-ஆக விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான விரிவான முழுமைத் திட்டத்தைத்(மாஸ்டர் பிளான்) தயாரிப்பதற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் எளிதாகத் திட்ட அனுமதி பெறும் வகையில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்துடன் கூடிய இணையவழித் தளம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நகர்ப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, இந்தாண்டு ரூ.1,253 கோடி மதிப்பில் 14,194 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. 2031-ம் ஆண்டுக்குள் தமிழக நகரங்களை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றும் நோக்கில், ‘முதல்வரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்’ அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக நடப்பு நிதியாண்டில் ரூ.2,117 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னையின் அடையாளங்களாகக் கருதப்படும் கூவம் மற்றும் அடையாறு ஆறுகளை மீட்டெடுக்க, உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும். ஆறுகளில் பொது மக்கள் படகு சவாரி செய்தல், கரைகளில் குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடல்கள் மற்றும் பூங்காக்கள் என நதிக்கரையில் உடற்பயிற்சி மற்றும் தூய்மையான காற்றை உறுதி செய்யும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.