மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா, ஆ. கொக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட செக்கானூரணியில் மதுரை-தேனி மெயின் ரோட்டில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று கட்டப்பட்டு வரும் இந்தப் பேருந்து நிலையத்திற்கு, தென் தமிழகத்தின் ஒப்பற்ற தலைவரும், கல்விப் பணிக்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்தவருமான அமரர் பி.கே. மூக்கையா தேவர் அவர்களின் பெயரைச் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
பி.கே. மூக்கையா தேவர் அவர்கள் கள்ளர் கல்விக் கழகம் அமைய பெரிதும் காரணமாக இருந்தவர். ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி மக்கள் சேவையில் முத்திரை பதித்தவர். குறிப்பாக, செக்கானூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்குக் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக அரும்பாடுபட்டவர். அவரின் கல்விப் பணியைப் போற்றும் விதமாகவே மக்கள் அவரை "கல்வித் தந்தை" என்று அன்போடு அழைத்து வருகின்றனர். அவர் ஆற்றிய தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில், புதிதாக அமையும் பேருந்து நிலையத்திற்கு அவரது பெயரை வைப்பதுதான் அவருக்குச் செய்யும் உண்மையான கௌரவமாக இருக்கும் எனப் பொதுமக்கள் கருதுகின்றனர்.
இந்த நியாயமான கோரிக்கையை முன்னெடுத்து, உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.வி. கதிரவன் மிகச் சிறப்பான முறையில் செயலாற்றி வருகிறார். ஆ. கொக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட தேங்கல்பட்டி, பாறைப்பட்டி, சிக்கம்பட்டி, அய்யம்பட்டி, ஒத்தப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 15,000 குடும்பங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர் இந்த முயற்சியைத் தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.
ஏற்கனவே கடந்த 26.01.2026 அன்று செக்கானூரணி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், இந்தப் பேருந்து நிலையத்திற்கு பி.கே. மூக்கையா தேவர் பெயரைச் சூட்ட வேண்டும் என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.வி. கதிரவன் தலைமையில், ஆ. கொக்குளம் கிராமக் கமிட்டித் தலைவர் .பழனி மற்றும் கிராமப் பொதுமக்கள் இணைந்து மதுரை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் ஆகியோரிடமும் உரிய பரிந்துரை செய்யக் கோரி மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. மனு அளிக்கும் நிகழ்வின் போது கவிக்குமார் , பன்னியான் ஆனந்தன் மற்றும் பலர் உடன் இருந்தனர்
மக்களின் உணர்வுகளையும், ஒரு வரலாற்றுத் தலைவரின் தியாகத்தையும் மதித்து, செக்கானூரணி பேருந்து நிலையத்திற்கு பி.கே. மூக்கையா தேவர் பெயரைச் சூட்ட அரசு முன்வர வேண்டும் என்பதே ஒட்டுமொத்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும். தகுந்த நேரத்தில் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்த பி.வி. கதிரவன் அவர்களின் முயற்சிக்குச் சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.