தென்காசி மாவட்டத்தையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தற்போது அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அந்த மாவட்டத்தில் உள்ள நீர்வீழ்ச்சிகள் மற்றும் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. முக்கிய சுற்றுலா தலமான குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

இதமான சீசன் நிலவுவதாலும், சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறை என்பதாலும் குற்றாலத்தில் சுற்றுலாபயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. பொதுமக்கள் அருவிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் காரணமாக அப்பகுதிகளில் இருந்த கடைகளில் வியாபாரம் அமோகமாக நடைபெற்றது. இதனால் கடைக்காரர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.