கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் மலர் சாகுபடியில் அதிகளவில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக ரோஜா சாகுபடி ஓசூர் பகுதியில் மிகவும் பிரபலமாகும். ஓசூர் பாகலூர், பேரிகை மற்றும் சுற்றுவட்டாரங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பசுமை குடில்கள் அமைத்து விவசாயிகள் ரோஜா சாகுபடி செய்து வருகின்றனர்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு,காதலர் தினம் ஆகிய நாட்களில் ஓசூர் பகுதியில் உற்பத்தியாகும் லட்சக்கணக்கான ரோஜா பூக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தும், நாட்டின் பல நகரங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் மலர் சாகுபடி விவசாயிகள் நல்ல வருவாயை ஈட்டி வருகின்றனர். இந்த நிலையில் வரும் 14-ம் தேதி காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்காக ஓசூர் பகுதியில் ரோஜா மலர்களை அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக சிவப்பு ரோஜாக்கள் எனப்படும் தாஜ்மகால் வகை ரோஜாக்களுக்கு சந்தைகளில் நல்ல வரவேற்பு உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு சிவப்பு ரோஜா பூவின் விலை ரூ. 7-க்கு விற்பனையான நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு அதன் விலை மேலும் உயரக்கூடும். இந்த நிலையில் தற்போது 20 பூக்கள் கொண்ட ஒரு கட்டு சிவப்பு ரோஜா ரூ. 400-க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் மிகழ்ச்சி அடைந்துள்ளனர்.