தமிழகத்தை போல கேரளாவிலும் நேற்று சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. கேரள அரசின் சாதனைகளை பட்டியலிட்டு அம்மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையைத் தொடங்கி வாசித்தார். அப்போது, கேரளாவிற்கு வழங்கப்பட வேண்டிய நிதிப் பங்கீட்டை மத்திய அரசு குறைத்துள்ளதாக குற்றம்சாட்டினார். குறிப்பாக, கடன் வாங்கும் வரம்பை சுமார் ரூ.4000 கோடி வரை குறைத்தது மற்றும் ஜி.எஸ்.டி இழப்பீடு தொடர்பான கட்டுப்பாடுகள் மாநிலத்தின் நிதி நிலையைப் பாதித்துள்ளதாக குறிப்பிட்டார்.

இதனால் 2025-26 நிதியாண்டில் சுமார் ரூ.17,000 கோடி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் கேரளா குறிப்பிடத்தக்க சமூக முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும், வறுமை ஒழிப்பு, வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் மாநில அரசு சிறப்பாகச் செயல்படுவதாகவும், கேரள மாநிலம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றும், பத்து ஆண்டுகளில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது என்றும் கவர்னர் தெரிவித்தார்.

மேலும் மலையாளத்தை மாநிலத்தின் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக்குவதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் உரையில் விளக்கினார். அதே வேளையில், சிறுபான்மையினரின் மொழி உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் உறுதியளித்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்கள் கேரளாவிற்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நாளை 22 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும். கேரள நிதியமைச்சர் கே.என். பாலகோபால் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை வரும் 29-ம் தேதி அன்று அவையில் தாக்கல் செய்வார்.