கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி. ராமசந்திர ராவ், தனது அலுவலகத்தில் பணியில் இருந்த போது பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இது சர்ச்சையான நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது கர்நாடக மாநில அரசு.

அந்த வீடியோ வெளியான பின்னர் கர்நாடக மாநில அமைச்சர் ஜி.பரமேஸ்வராவை நேரில் சந்தித்து டி.ஜி.பி. ராமசந்திர ராவ் விளக்கம் கொடுத்திருந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் செய்யப்பட்ட சதி வேலை இது என்றும். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் பெலகாவியில் பணியில் இருந்த போது இது ரெக்கார்ட் செய்யப்பட்டது என்றும் தெரிவித்தார்.

இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, அமைச்சர் லட்சுமி ஹெபால்கர் ஆகியோர் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதன்படி அவரை நேற்று சஸ்பெண்ட் செய்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது. இது காவல்துறைக்கு ஏற்பட்ட களங்கம் என எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.