பா.ஜ.க.வின் 11-வது தேசியத் தலைவராக ஜே.பி. நட்டா கடந்த 2020 ஜனவரி 20-ம் தேதி பொறுப்பேற்றார். பா.ஜ.க.வில் தலைவர் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் முடிந்தபோதிலும், சில காரணங்களால் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த சூழலில், பீகார் மாநில அமைச்சராக இருந்த நிதின் நபின் (45), கட்சியின் செயல் தலைவராக கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
இதன் தொடர்ச்சியாக, 12-வது தேசியத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று 20-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கான வேட்புமனுக்கள் நேற்று முன்தினம் பெறப்பட்டன. இப்போதைய பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் நிதின் நபின் சார்பில் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி டாக்டர் கே. லட்சுமணிடம் வழங்கினர். வேட்புமனு தாக்கலுக்கான கால அவகாசம் நேற்று முன்தினத்துடன் முடிந்த நிலையில், வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கு நிதின் நபின் பெயர் மட்டுமே முன்மொழியப்பட்டுள்ளதால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் நேற்று காலை 11.30 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சித் தலைவராக நிதின் நபின் பதவியேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபீனுக்கு இசட் பிரிவு ஆயுத பாதுகாப்பு வழங்கப்படும் என மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) நேற்று அறிவித்தது. கடந்த டிசம்பர் 14-ம் தேதி அக்கட்சியின் நாடாளுமன்ற வாரிய ஒப்புதலுடன், தேசிய செயல் தலைவராக நபீன் நியமனம் செய்யப்பட்ட சில நாட்களில் அவருக்கு சி.ஆர்.பி.எப் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், உளவு துறை அளித்த பாதுகாப்பு ஆய்வு தொடர்பான தகவலை அடுத்து, அவருக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் இந்த உயரிய பாதுகாப்புக்கான உத்தரவை பிறப்பித்து உள்ளது. இந்த புதிய இசட் பிரிவு ஆயுத பாதுகாப்பின்படி, நாடு முழுவதும் நபீன் செல்லும் இடங்களில் எல்லாம் ஆயுதமேந்திய சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு அளிக்கப்படும். அவருடைய வீட்டிலும் இந்த பாதுகாப்பு வழங்கப்படும்.