தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அ.தி.மு.க.வில் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து கடந்த 23-ம் தேதி மதுராந்தகத்தில் என்.டி.ஏ கூட்டணியின் பொதுக்கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, டிடிவி தினகரன், ஜிகே வாசன், பூவை ஜெகன்மூர்த்தி, ஏசி சண்முகம், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இருந்தாலும் அ.தி.மு.க. தரப்பில் இன்னும் சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
குறிப்பாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோருடன் அ.தி.மு.க. பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க. நிர்வாகிகள் முதலில் கிருஷ்ணசாமியை கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக விரைவில் கிருஷ்ணசாமியுடனான தொகுதிப் பங்கீடு நிறைவடைந்து, எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு நடக்கலாம் என்று கூறப்படுகிறது. புதிய தமிழகம் கட்சிக்கு 2 தொகுதிகள் வரை கொடுக்க அ.தி.மு.க முடிவு எடுத்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.