தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மூத்த தலைவர் ராகுல் காந்தி இடையிலான உயர்மட்டச் சந்திப்பு தீவிரமாக நடந்தது. இதில் கூட்டணி தொடர்பான இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றாலும் இரண்டு தரப்பிலும் பல முக்கியமான விஷயங்கள் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

தி.மு.க. எம்.பி. கனிமொழி மற்றும் ராகுல் காந்தி இடையிலான சந்திப்பு மிகவும் இணக்கமான முறையில் நடந்து முடிந்துள்ளது. கடந்த சில மாதங்களாக இரு கட்சிகளுக்கும் இடையே நிலவி வந்த கசப்பான சூழலை இந்தச் சந்திப்பு மாற்றியுள்ளது. கனிமொழி வந்த போது, முதலில் வாங்க மேடம்.. எப்படி இருக்கீங்க.. என்று சில நிமிடம் பேசி உள்ளனர். டெல்லி கிளைமேட் குறித்தும் பேசி உள்ளனர். அதே போல் சில நிமிடங்கள் அஜித் பவாரின் விமான விபத்து தொடர்பாக கலக்கத்துடன் பேசி உள்ளனர்.

இது போக.. தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் எப்படி நடக்கின்றன.. மக்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்பது பற்றி எல்லாம் பேசி உள்ளனர். மகளிரணி நடத்திய மாநாடு பற்றி கேள்விப்பட்டேன்.. நன்றாக இருந்தது.. கலக்கிட்டீங்க.. என்றும் ராகுல் காந்தி கனிமொழியிடம் பாராட்டும் விதமாக பேசி இருக்கிறாராம். இந்த அளவிற்கு தமிழக அரசியலை ராகுல் பாலோ செய்வதை கனிமொழி வியந்து பார்த்துள்ளார்.

அதை தொடர்ந்து கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும் எந்தவொரு கோரிக்கையையும் (ஆட்சியில் பங்கு போன்றவை) காங்கிரஸ் முன்வைக்காது என ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். மேலும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கைகோர்க்கும் எண்ணம் காங்கிரசுக்கு இல்லை என்பதையும், தி.மு.க.வுடனான கூட்டணியே தொடரும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்தச் சந்திப்பு, கடந்த பல மாதங்களாக நீடித்து வந்த அரசியல் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.