தமிழக சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களம் தற்போதே சூடுபிடித்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. உள்ளது. இந்நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பா.ம.க. தலைவர் அன்புமணி நேற்று காலை சந்தித்தார். எடப்பாடி பழனிசாமி - அன்புமணி சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் ஜெயக்குமார், வழக்கறிஞர் பாலு, திலகபாமா ஆகியோர் உடன் இருந்தனர்.
கடந்த முறை அ.தி.மு.க. கூட்டணியில் 23-ல் போட்டியிட்டு 5 தொகுதிகளில் பா.ம.க. வென்றிருந்தது. 2021-ல் வடக்கு, வடமேற்கு மாவட்டங்களில் அ.தி.மு.க. வெற்றிக்கு பா.ம.க. கணிசமாக உதவி இருந்தது. இதனைத்தொடர்ந்து பா.ம.க. - அ.தி.மு.க. இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது . இந்நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருகிற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. ஏற்கனவே கூட்டணி அமைத்துள்ளது. தற்போது பா.ம.க. கூட்டணியில் இணைந்துள்ளது. விரைவில் மேலும் சில கட்சிகள் சேருவார்கள். எங்கள் கூட்டணி இயற்கையான கூட்டணி. அ.தி.மு.க. தொண்டர்கள் விரும்பியபடி கூட்டணி அமைத்துள்ளோம். இது வெற்றி கூட்டணி. மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற லட்சியத்தின் அடிப்படையில், வலிமையான தமிழகத்தை உருவாக்க, மக்களுக்கான திட்டங்களை கொடுக்க, 234 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறுவோம். தொகுதி எண்ணிக்கையை முடிவு செய்து விட்டோம். மற்றதை பின்னர் அறிவிப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதனிடையே நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விடம் 25 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டை அன்புமணி தரப்பு கேட்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்து சென்றுள்ள நிலையில் தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்ட குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 17 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.