காவல்துறை உயரதிகாரிகள் வீடுகளில் ஆர்டர்லிகள் நியமிக்கப்படுவதை கண்காணிக்க மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் குழுவை அமைக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கோயில் நிலத்திற்கும், தமக்கும் பாதுகாப்பு வழங்கக்கோரி சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது தமிழகத்தில் ஆர்டர்லி முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டுமென கடந்த 2022-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு முழுமையாக பின்பற்றப்பட்டதா? என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியிருந்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையில், ஆர்டர்லிகளாக தற்போது யாரும் இல்லை என தமிழக டி.ஜி.பி. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஆர்டர்லிகளாக யாரையும் பணியில் வைத்திருக்கக் கூடாது என்று டி.ஜி.பி சுற்றறிக்கை அனுப்பியதை பாரட்டுவதாகவும் அதே வேளையில் ஆர்டர்லிகளாக சீரூடை காவலர்கள் பணியாற்றி வருவதாக செய்தி தாள்களிலும், பொதுத்தளத்திலும் தகவல்கள் வரும் நிலையில் ஆர்டர்லிகளாக யாரும் இல்லை என டி.ஜி.பி. கூறுவதை ஏற்க முடியவில்லை என தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ஆர்டர்லிகளாக பணியில் இருப்பது தொடர்பாக புகார் எதுவும் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் கூறினார். இதனையடுத்து, இந்த வழக்கில் தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை செயலாளரை தாமாக முன்வந்து இணைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, மாவட்ட அளவில் ஆர்டர்லிகளை பணியமர்த்த கூடாது என்று உள்துறை செயலாளர் டி.ஜி.பி.க்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறி அது தொடர்பான அறிவுறுத்தல் உத்தரவை தாக்கல் செய்தார்.