நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. கடலூரில் வரும் 9-ம் தேதி நடைபெறும் தே.மு.தி.க. மாநாட்டில் கூட்டணியை அறிவிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதற்கிடையே, தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய கட்சியான காங்கிரஸ், இந்த முறை ஆட்சியிலும் பங்குகேட்டு வலியுறுத்தி வருகிறது. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி கொள்கையுடன் இருக்கும் தி.மு.க. இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டது.
இந்த நிலையில் தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு 9 தொகுதிகள் வழங்க தி.மு.க. ஒத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதுவும், பிரேமலதா, விஜய் பிரபாகரன் போட்டியிட குறிப்பிட்ட தொகுதியையும் ஒதுக்கித்தர முன்வந்துள்ளதாகவும் தெரிகிறது.
ஏற்கனவே, தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி கூட்டணியை விட்டு வெளியேறினால், கடந்த முறை போட்டியிட்ட 25 தொகுதிகள் தி.மு.க.வுக்கு மிச்சமாகும். அதில், 9 தொகுதியை தே.மு.தி.க.வுக்கு கொடுத்து விட்டு, கூடுதல் தொகுதிகள் கேட்கும் கட்சிகளுக்கு மீதமுள்ள தொகுதிகளில் சிலவற்றை கொடுக்கலாம் என்றும் தி.மு.க. நினைக்கிறதாம். கூடுதலாக சில தொகுதிகளை தி.மு.க.வே கையில் எடுக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.