சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக.6) காலை பவுனுக்கு ரூ.2,160 என அதிகரித்தது. வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்துள்ளது.

உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. அது சர்வதேச அளவில் தங்க விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மே மாதம் தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதையடுத்து தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. நேற்று (புதன்கிழமை) தங்கம் விலை இரண்டு முறை உயர்ந்தது. நேற்று மட்டும் பவுனுக்கு ரூ.2,240 என அதிகரித்து விற்பனையானது.

இந்தச் சூழலில் சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.270 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,750-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.2,160 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,10,000-க்கு விற்பனையாகிறது. 24 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.294 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,000-க்கு விற்பனையாகிறது. 18 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.270 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,565-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.250-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது.