டாக்கா: டில்லியில் நடந்த வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பொதுநிகழ்ச்சியில், ஷாகிப் அல் ஹசன் கலந்து கொண்டதால், வங்கதேசத்தில் உள்ள அவரது வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வங்கதேசத்தில் 2024ம் ஆண்டு மாணவர்கள் போராட்டத்தால் ஆட்சியை இழந்த அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா, இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார். சுமார் 2 ஆண்டுகளாக தங்கியிருக்கும் அவர் பொதுவெளியில் தோன்றவில்லை. இந்த சூழலில், நேற்று வெளிநாட்டு செய்தியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாஜேத், வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அவாமி லீக் கட்சியின் முன்னாள் எம்பியுமான ஷாகிப் அல் ஹசன் உள்பட அவரது ஆதரவாளர்கள் சிலர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், டில்லியில் ஷேக் ஹசீனா பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அவாமி லீக் கட்சியின் முன்னாள் எம்பியுமான ஷாகிப் அல் ஹசனின், மகுரா பகுதியில் உள்ள வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அவாமி லீக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஷேக் ஹசீனாவைப் போல, கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஷாகிப் அல் ஹசனும், வங்கதேசத்தை விட்டு வெளியே வசித்து வருகிறார். தற்போதைய அரசால் கொலை வழக்குப்பதியப்பட்ட 147 பேரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.