கிராமத்தின் வளர்ச்சித் திட்டங்களைத் தேர்வு செய்வதற்கும், மக்களின் அடிப்படைத் தேவைகளை வெளிப்படையாக எடுத்துரைப்பதற்கும் கிராம சபை உன்னதமான ஜனநாயக மேடையாக விளங்குகிறது. அரசின் அனைத்து நலத்திட்டங்களும் தகுதியான அடித்தட்டு மக்களை முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்வதே கிராம சபைக் கூட்டங்களின் முதன்மை நோக்கம் என மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்தார்.


மகாத்மா காந்தியின் 158-வது பிறந்தநாளையொட்டி மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட செட்டிகுளம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி தின சிறப்பு கிராம சபைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் நடைபெற்றது.


கூட்டத்துக்கு முன்னதாக மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்துக்கு ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து வேளாண்மைத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு அரங்குகளை ஆட்சியர் பார்வையிட்டார்.


செட்டிகுளம் ஊராட்சியின் வளங்கள், கட்டமைப்பு வசதிகள் மற்றும் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்ட (VPDP) வள வரைபடம் மற்றும் சமூக வரைபடக் கோலங்களையும் அவர் பார்வையிட்டு பாராட்டினார்.


இதையடுத்து தூய்மையே சேவை, சுகாதாரம் மற்றும் தொழுநோய் விழிப்புணர்வு தொடர்பான உறுதிமொழிகளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர்.


கிராம சபைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியர், குடிநீர் விநியோகம், தூய்மைப் பணிகள், கல்வி, சுகாதாரம், ஊரக உட்கட்டமைப்பு உள்ளிட்ட அரசின் அனைத்து நலத்திட்டங்களும் தகுதியான மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வது கிராம சபையின் முக்கிய நோக்கம் என்றார். பொதுமக்கள் தங்களது ஊராட்சியின் வளர்ச்சித் திட்டங்களில் முழுமையாகப் பங்கேற்க வேண்டும் என்றும், பொது சுகாதாரத்தைப் பேணுவதிலும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருப்பதிலும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விரைவான கள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


கிராம சபையில் செட்டிகுளம் ஊராட்சியின் வளர்ச்சிப் பணிகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொருள்கள் குறித்து பொதுமக்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டன.


ஊராட்சியைத் தூய்மையாகப் பராமரிப்பதிலும், தடையற்ற குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதிலும் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குநர்களை ஆட்சியர் சால்வை அணிவித்து, பரிசுப் பொருள்கள் வழங்கி கௌரவித்தார்.


மேலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் இரண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்திற்கான சமுதாய முதலீட்டு நிதிக் காசோலைகளை வழங்கினார்.


தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து பல்வேறு அடிப்படைத் தேவைகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை ஆட்சியர் நேரில் பெற்றுக்கொண்டார்.


நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சா.சதீஷ்பாபு,வேளாண்மைத்துறை நேர்முக உதவியாளர் சாந்தி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள் மற்றும் தணிக்கை-வடக்கு) விசாலாட்சி, வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணவேணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகா ,ஊராட்சி செயலாளர் கணேசன்,உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.