மதுரை, அக்.2–
அண்ணல் காந்தியடிகளின் 158-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மதுரை மேலமாசி வீதியில் உள்ள கதர் கிராப்ட் விற்பனை நிலையத்தில் தீபாவளி கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனை இன்று தொடங்கியது.
மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., காந்தியடிகளின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன், குத்துவிளக்கேற்றி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தார்.
கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு ஆண்டு முழுவதும் வாழ்வாதாரம் வழங்கும் நோக்கில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ், மதுரை மாவட்டத்தில் அன்னமார்பட்டியில் கிராமிய நூற்பு நிலையம், உசிலம்பட்டியில் கதர் உபகிளை மற்றும் மேலமாசி வீதியில் கதர் அங்காடி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. அன்னமார்பட்டி நூற்பு நிலையத்தில் 12 ராட்டைகளும், உசிலம்பட்டி கதர் உபகிளையில் 11 தறிகளும் இயங்கி வருகின்றன.
கடந்த ஆண்டு மதுரை மாவட்ட கதர் அங்காடிகளுக்கு கதர் ரகங்கள் விற்பனை இலக்காக ரூ.105 லட்சம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ரூ.68.32 லட்சத்திற்கும், கிராமப் பொருட்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ.40 லட்சம் இலக்கில் ரூ.35.16 லட்சத்திற்கும் விற்பனை நடைபெற்றுள்ளது.
மேலும், மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மழைக்காலப் பராமரிப்பு உதவித்தொகையாக 2025–26-ம் ஆண்டில் 316 பயனாளிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 வீதம் வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது.
காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் தீபாவளி பண்டிகை முடியும் வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனைகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் அரசு மருத்துவமனை வளாகங்களில் தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு வெள்ளி ஜரிகை பட்டுச் சேலைகள், கதர் வேட்டிகள், துண்டுகள், ஆயத்த ஆடைகள், மெத்தை, தலையணைகள், கதர் பட்டு, கதர் பாலியஸ்டர், கம்பளி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், அக்மார்க் சான்று பெற்ற தேன், குளியல் சோப்புகள், சாம்பிராணி, பூஜைப் பொருட்கள், பனைவெல்லம் உள்ளிட்ட பனை உற்பத்திப் பொருட்களும் கிடைக்கின்றன.
மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் கதர், பாலிவஸ்திரா மற்றும் பட்டு ரகங்களுக்கு 30 சதவீதம் வரையிலும், கம்பளி ரகங்களுக்கு 20 சதவீதம் வரையிலும் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்களின் வசதிக்காக 10 மாத சம தவணைகளில் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் வகையிலான கடன் விற்பனை வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மதுரை மாவட்டத்திற்கு கதர் விற்பனை இலக்காக ரூ.35 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீபாவளி முடியும் வரை கதர் அங்காடிகள் விடுமுறையின்றி செயல்படும்.
கதர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கதர் பொருட்களை வாங்கி ஆதரவு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் கதர் கிராமத் தொழில்கள் வாரிய மதுரை உதவி இயக்குநர் இரா.பாலமாணிக்கம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.