மதுரை, அக்.2-

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்.) மதுரை வணிகப் பகுதியின் 26-வது நிறுவன தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் பங்கேற்ற நடைபயணம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கிய பி.எஸ்.என்.எல். மதுரை வணிகப் பகுதி சார்பில் நடைபெற்ற இந்த நடைபயணத்தில் சுமார் 60 ஊழியர்கள் கலந்து கொண்டனர். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பிரபலமான மொபைல் மற்றும் FTTH திட்டங்களை விளக்கும் பதாகைகளை ஊழியர்கள் ஏந்திச் சென்றனர்.

தல்லாகுளம் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் இருந்து தொடங்கிய நடைபயணத்தை, மதுரை பி.எஸ்.என்.எல். முதன்மைப் பொது மேலாளர் பி. லோகநாதன், I.T.S., கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நடைபயணத்தின்போது பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், அந்நிறுவனம் வழங்கும் பல்வேறு சேவைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறு நாடகத்தையும் நடத்தினர். காந்தி அருங்காட்சியகம், ராஜா முத்தையா மன்றம், தல்லாகுளம் பெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்ற நடைபயணம், தல்லாகுளம் பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் உள்ள சி.டி.ஓ. வளாகத்தில் நிறைவடைந்தது.

மேலும், நிறுவன தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஓவியம் மற்றும் வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா மதுரை பி.எஸ்.என்.எல். முதன்மைப் பொது மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

விழாவில் முதன்மைப் பொது மேலாளர் பி. லோகநாதன், I.T.S., போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.