மதுரை, செப். 23-
மதுரை பாடல்ஸ்தலம் பெற்ற ஒரு சிறப்பு நகரமாகும். இந்த நகரின் நடுவே புராண காலத்தில் கூறியது போல் வைகை நதி செல்கிறது. ஒரு காலத்தில் வைகை நதியில் இருந்து மண் தோன்றி அதில் இருந்து வரும் தண்ணீரை குடத்தில் பிடித்து சம்பிரதாயப்படி மதுரை மீனாட்சி அம்மனுக்கு காலையில் முதல் பூஜைக்கு வைகை நீரில் தான் பூஜை செய்து வழிபடுவார்கள். இது தொன்று தொட்டு நடந்து வந்தது. இது ஒரு வரலாறு.
ஆனால் தற்போது இந்த வைகை நதியில் மதுரையில் உள்ள அனைத்து கழிவு நீரும் கலந்து மாசு அடைந்து துர்நாற்றம் வீசும் அளவுக்கு சென்று விட்டது. இதனால் மீனாட்சியம்மன் கோவிலுக்கு அபிஷேகம் செய்ய வேண்டிய தண்ணீர் நிறுத்தப்பட்டது. தற்போது மாநகராட்சியால் வழங்கப்படும் குடிதண்ணீரில் மீனாட்சியம்மன் கோவிலில் பூஜை நடத்தப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, வைகை நதியை புனரமைக்க வேண்டும் என்று பல தொண்டு நிறுவனங்கள், சமுதாய சிந்தனை உடையவர்கள் வைகையாற்றை சுத்தம் செய்து வருகிறார்கள். ஏதோ ஒரு சொற்ப தூரத்தை மட்டும் சுத்தம் செய்துவிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு சென்று விடுகிறார்கள். இந்த வைகையாற்றை சுத்தம் செய்ய வேண்டியது பொதுப்பணித்துறையின் கீழ் வருகிறது. ஆனால் பொதுப்பணித்துறையோ இந்தப்பணியை செய்வதே இல்லை.
குறிப்பாக கோரிப்பாளையம் பகுதியில் பெண்கள் கல்லூரி உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மாணவிகள் கல்லூரிக்கு படிக்க சென்று வருகிறார்கள். அங்கு உள்ளே ஆஸ்டலில் தங்கியும் மாணவிகள் படித்து வருகிறார்கள். இரவு ஆனால் கொசுக்களும், துர்நாற்றமும் வீசுவதாக பெண்கள் கல்லூரியின் முதல்வரிடம் பல புகார்களையும் தெரிவித்தனர். அந்த கல்லூரியில் அடிக்கடி மாணவிகள் காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார்கள். கல்லூரி நிர்வாகமும், பொதுப்பணித்துறைக்கு பலமுறை கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதை கண்டித்து சில சமூக சேவகர்கள் போராட்டமும் நடத்தினர்.
தற்போது சாரிடபிள் பவுண்டேஷன் சார்பாக மீனாட்சி கல்லூரி அருகில் உள்ள வைகை நதியில் ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை மற்றும் கழிவுகளை சுத்தம் செய்வதை வாடிக்கையாக கொண்டு வந்தார்கள். இந்த அமைப்பினர் பல சமூக சேவைகளையும் செய்து வருகிறார்கள். இந்த சமூக அமைப்பை சுத்தம் செய்யும் பணியை செய்ய விடாமல் பொதுப்பணித்துறை அதிகாரியான தங்கவேலு என்பவர் இருந்து வருகிறார். ஆனால் சமூக பணியை செய்து வரும் ஸ்டார் குருசாமியை “நீ செய்யக்கூடாது, பொதுப்பணித்துறை தான் செய்ய வேண்டும்” என தடுத்து வருகிறார்.
மேலும் மதுரையில் பெருவிழாவாக ெகாண்டாடப்படும் சித்திரை திருவிழாவின் போது கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவது ஒவ்வொரு வருடமும் நடந்து வருகிறது. அந்த இடத்தையும் சுத்தம் செய்து பொதுமக்களுக்கு பாதுகாப்பாக ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி சுத்தமாக வைத்திருப்பார்கள். தற்போது அதையும் செய்யக்கூடாது என அதிகாரிகள் தடுக்கின்றனர் என சமூக ஆர்வலர் குவைத் அபு கூறினார்.