தேனி மாவட்டம் கடமலை-மயிலாடும்பாறை ஒன்றியம் தாழையூத்து கிராமத்தில் இருந்து, மதுரை மாவட்டம் மல்லப்புரம் கிராமத்தை இணைப்பதாக அமைந்துள்ள 8 கிலோமீட்டர் மலைச்சாலையை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடமலை-மயிலாடும்பாறை ஒன்றியத்தில் இருந்து விருதுநகர், பேரையூர், எழுமலை, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல பிரதான சாலை வசதி இருந்தாலும், பயணத் தொலைவு குறையும் என்பதால் அனைவரும் இந்த மலைச்சாலையைப் பயன்படுத்தத் தொடங்கினர். மேலும் காலை, மாலை நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் இயக்கப்பட்டுப் போக்குவரத்து அதிகரித்ததால், இச்சாலையின் முக்கியத்துவத்தைக் கருதி 20 ஆண்டுகளுக்கு முன்பு தாழையூத்து - மல்லப்புரம் இடையே தார்ச்சாலை அமைக்கப்பட்டு, அரசு மினி பேருந்து சேவையும் தொடங்கப்பட்டது.
ஆனால் தார்ச்சாலை அமைக்கப்பட்ட பிறகு பராமரிப்புப் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாததால், ஆக்கிரமிப்பு மற்றும் மண்சரிவு ஏற்பட்டுச் சாலையின் அகலம் மிகவும் குறுகியதுடன், கனமழையால் பல்வேறு இடங்களில் சாலை குண்டும் குழியுமாகச் சேதமடைந்தது. இதனால் அரசுப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டு, சில ஆண்டுகள் வரை மக்களுக்குப் பயன்படாமல் இருந்தது. சாலை குறுகலாக உள்ளதால், ஒரே நேரத்தில் ஆட்டோ, கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்கள் கூட விலகிச் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் இச்சாலையின் ஓரத்தில் பெரும்பாலான இடங்களில் தடுப்புச் சுவர்கள் இல்லாததால், லாரி, வேன் போன்ற பெரிய வாகனங்கள் விலகிச் செல்லும் போது சிறிய கணக்கு தவறினாலும் பெரிய அளவில் விபத்து ஏற்படும் அச்சம் நிலவுகிறது. விபத்து அச்சத்தால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் இச்சாலையைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து வரும் நிலையில், தற்போது நடைபாதை வழியாக இருசக்கர வாகனங்கள் மட்டுமே அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 8 கிலோமீட்டர் தூரமுள்ள மலைச்சாலையில், தேனி மாவட்ட எல்லை வரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்ட போதிலும், மதுரை மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 7 கிலோமீட்டர் சாலை சீரமைக்கப்படாமல் பாழடைந்த நிலையிலேயே உள்ளது.
இப்பிரச்சினை குறித்துக் கடமலைப் பாறை ஒன்றிய கவுன்சிலர் கருப்பையா தெரிவிக்கையில், "மதுரை மாவட்டம் எழுமலை, கல்லுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடமலை-மயிலாடும்பாறை ஒன்றிய கிராமங்களுக்கு உசிலம்பட்டி, ஆண்டிபட்டி வழியாக பிரதான சாலையில் சென்றால் 70 கிலோமீட்டர் தொலைவு பயணிக்க வேண்டும். ஆனால் மல்லப்புரம் மலைச்சாலையைப் பயன்படுத்தினால் அத்தொலைவு 20 கிலோமீட்டராகக் குறைந்துவிடும். இந்த அளவு பயனுள்ள சாலை அதிக சேதமடைந்து விபத்து ஏற்படுத்துகிறது என்பதால், ஆபத்து இருந்தாலும் பயண நேரம் மற்றும் எரிபொருள் செலவைக் கருத்தில் கொண்டு, மலைச்சாலையைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எனவே மதுரை மற்றும் தேனி மாவட்ட அதிகாரிகள் இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுத்து மல்லப்புரம் மலைச்சாலையை விரைவாகச் சீரமைக்க வேண்டும்" என்று கூறினார்.
எனவே, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தேனி மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகங்கள் இணைந்து மல்லப்புரம் மலைச்சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது.