தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (06.08.2026) நடைபெற்ற வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தையடுத்து, புதுக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. தனது சமூக வலைதளப் பதிவில் மாநில அரசின் வேளாண் பட்ஜெட்டை விமர்சித்துள்ளார்.
அந்த பதிவில், இன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் பங்கேற்றதாக குறிப்பிட்டுள்ள அவர், வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் புதிய மற்றும் உருப்படியான திட்டங்கள் இடம்பெறவில்லை என்றும், இது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி மற்றும் மேகதாது தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு, குறுவை சாகுபடி உள்ளிட்ட விவசாயிகளின் அடிப்படை கோரிக்கைகளுக்கு இந்த வேளாண் பட்ஜெட்டில் தெளிவான அறிவிப்புகள் இடம்பெறவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
விவசாயிகளின் உரிமைகள் மற்றும் தமிழ்நாட்டின் நலனுக்காக சட்டப்பேரவையிலும், மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றும், கட்சித் தலைவர் மற்றும் இளந்தலைவரின் வழிகாட்டுதலின்படி செயல்படுவோம் என்றும் தனது பதிவில் புதுக்கோட்டை எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.