மும்பை: பாலியல் வன்கொடுமை வழக்கில் தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டு சிறைதண்டனை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு கோவாவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற மாநாட்டின் போது, தன்னுடன் பணியாற்றிய பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது வழக்குப் பதியப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, கடந்த 2021ம் ஆண்டு கோவா கீழ் நீதிமன்றம் அவரை விடுவித்தது.

கீழ் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் நீலா கோகலே மற்றும் அமித் ஜாம்சண்டேகர் அடங்கிய அமர்வு முன்பு வந்த போது, தருண் தேஜ்பாலை குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. மேலும், அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. மேலும், அவர் சரணடைய இரண்டு வார கால அவகாசம் அளித்துள்ளது.