மதுரை, அக். 15-
தமிழகத்தில் ‘வெற்றி பயணம்’ என்ற பெயரில் புறநகர் பஸ்களிலும் மகளிருக்கான இலவச பயண திட்டத்தை, முதல்வர் விஜய் அக்.2ல் தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்கு தனியார் மற்றும் மினிபஸ் உரிமையாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏற்கனவே விலைவாசி உயர்வால் தவிக்கும் நிலையில் தங்களின் வாழ்வாதாரத்தில் அரசு கைவைத்து விட்டதாக ஆட்டோ டிரைவர்களும் புலம்புகின்றனர்.
மாவட்ட தனியார் மினி பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் கண்ணன்: வெற்றி பயண திட்டத்தால் எங்களது தினசரி வருவாய் 50 சதவீதம் குறைந்துள்ளது. ஒரு பஸ்சை இயக்க டீசல், ஊழியர் சம்பளம், படிகள் என வருவாயில் 70 சதவீதம் இந்த செலவுகளுக்கே சென்றுவிடும். மீதமுள்ள தொகையில் இன்சூரன்ஸ், எப்.சி., வரி, வாகன பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளை சமாளித்து வந்தோம். தற்போது வருவாய் இல்லாததால் பஸ்களை இயக்க உரிமையாளர்கள் சொந்தப் பணத்திலிருந்து ஈடுகட்டும் நிலை உள்ளது. ஏற்கனவே ஊழியர் பற்றாக்குறை உள்ளதால் வருவாய் குறைந்தாலும் டிரைவர், கண்டக்டர்களின் சம்பளத்தைக் குறைக்காமல் தக்கவைக்க போராடுகிறோம்.
இலவசப் பயணத்துக்கு குறிப்பிட்ட துாரம், நேரக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். வெற்றி பயண திட்டத்தை தனியார் பஸ்களுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும். அதற்கான கட்டணத்தை அரசு திருப்பி வழங்க வேண்டும். இதனால் பயணிகளுக்கு இலவசப் பயணம் தொடரும்; அதே நேரத்தில் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் வருவாய் கிடைக்கும்.
சிவபாலன், தனியார் பஸ் கண்டக்டர், மதுரை: வெற்றிப்பயண திட்டத்தால் தனியார் பஸ்களின் தினசரி வருவாய் வெகுவாக குறைந்துள்ளது. இத்திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்வது அவசியம். வருமானம் இல்லாமல் தனியார் பஸ்களில் பணிபுரியும் ஊழியர்கள் முதல் உரிமையாளர்கள் வரை செய்வதறியாமல் தவிக்கின்றனர். வெற்றி பயணம் திட்டத்தால் எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. தினசரி வருவாய் ரூ.10 ஆயிரம் வரை வசூலான பஸ்களில் தற்போது ரூ.2 ஆயிரம் கூட ஈட்ட முடியாமல் தவிக்கின்றன.
சசி, ஆட்டோ டிரைவர், மதுரை: வெற்றி பயண திட்டம் எங்கள் வாழ்வை அழிக்கும் வகையில் செயல்படுகிறது. மகளிர் இலவச பயணம், பைக் டாக்ஸி என மக்கள் சென்று விட்டதால் ஆட்டோ டிரைவர்கள் வாழ்வதற்கு வழியில்லாமல் உள்ளோம். விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு என வாழ்க்கையை நகர்த்த திணறுகிறோம். வாடிக்கையான சவாரிகள் கூட இல்லாமல் ஸ்டாண்டுகளில் ஆட்டோக்கள் காட்சியளிக்கின்றன. த.வெ.க., அரசு அனைத்து மக்களுக்கான அரசு என்பதை உறுதிப்படுத்த மகளிர் இலவச பயண திட்டத்தை திரும்பப்பெற வேண்டும்.
இவ்வாறு கூறினர்.