மதுரை, அக். 15-
மதுரையை சேர்ந்த கதிர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள இதயவியல் துறைக்கு தேவையான நவீன உபகரணங்களை வழங்க கோரி பல முறை மனு அனுப்பியும் தமிழக அரசு தற்போது வரை வழங்கவில்லை. அதனால், இதயவியல் துறைக்கான உபகரணங்களை விரைவாக கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று (12-10-26) வந்தது. மனுதாரர், அரசு தரப்பு என இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் கூறுகையில், ‘அரசு மருத்துவமனைக்கான வசதிகளை செய்து கொடுப்பதில்லை, தனியார் மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் உள்ளன. அரசு மருத்துவமனைகளில் இல்லாத உபகரணங்கள், தொழில்நுட்பங்கள் தனியார் மருத்துவமனைகளில் உள்ளது. இது போன்ற முரண்பாடுகள் தொடர்கிறது. ஒவ்வொரு அரசு மருத்துவரும் தனியே கிளினிக் வைத்து நடத்துகிறார். அரசு மருத்துவமனைக்கு வருவோரை பரிசோதித்து, மறுநாள் தனது கிளினிக்கிற்கு வர மருத்துவர் சொல்கிறார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கோரியுள்ள உபகரணங்களை வாங்க எவ்வளவு காலமாகும்? என அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.