மதுரை, அக். 15-

பாஜக முன்னாள் பிரமுகர் கருப்பு முருகானந்தம் மீது புகார் அளித்த பெண் தொடர்பான சித்தரிக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை 24 மணி நேரங்களில் சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சியை சேர்ந்த கருப்பு முருகானந்தத்தால் பாதிக்கப்பட்ட பெண் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “நான் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். 2007 ஆம் ஆண்டு எனக்கு திருமணமான நிலையில் 2 குழந்தைகள் உள்ளனர். எனக்கும் கணவருக்கும் முரண்பாடுகள் இருந்து வந்த நிலைகள் கருப்பு முருகானந்தம் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இந்நிலையில் என்னிடமிருந்து பணத்தைப் பறிக்கவும், கட்சியில் தனது நிலையை உயர்த்த என்னை பயன்படுத்தவும் செய்கிறார் என்பதை உணர்ந்ததால் புகார் அளித்தேன். இதனால் எனது மதிப்பை கெடுக்கும் வகையில் பொய்யான அவதூறுகளை சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். தவறான முறையில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை சித்தரித்து ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். கருப்பு எம் முருகானந்தம், சிலர் இணைந்து எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் இந்த செயலை செய்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரப்பப்பட்டு வரும் சித்தரிக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.

காவல்துறையிடம் புகார் அளித்தும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. எனவே கருப்பு எம் முருகானந்தம் ஆகியோர் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், சமூக வலைத்தளங்களில் உள்ள சித்தரிக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் அவதூறுகளை நீக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி, சமூக வலைதளங்களில் பெண் குறித்த அவதூறு வீடியோக்களை 24 மணி நேரத்தில் நீக்க வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை குறித்த காலத்தில் முடிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.