சென்னை, அக். 7-
“காலை 7 மணிக்கு ஆட்டோ ஸ்டாண்டுக்கு வந்துட்டேன். இப்போ மணி சாயங்காலம் 6 ஆகுது. மீட்டருக்கு இன்னும் போணியே ஆகல.
ஒரு சவாரி கூட கிடைக்காம வெறும் கையோட வீட்டுக்கு போற கொடுமை யாருக்கும் வரக்கூடாது...” திருச்சி, சேலம், திண்டுக்கல், மதுரை போன்ற இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களின் ஆட்டோ ஸ்டாண்டுகளில் இப்போது ஒலிக்கும் பொதுவான குமுறல் இதுதான். சமூக வலைதளங்களில் தனியார் பஸ் ஊழியர்களைத் தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுநர்களும் தங்களின் காலி ஆட்டோக்களையும், ஓடாத மீட்டர்களையும் வீடியோ எடுத்து கண்ணீருடன் பதிவிட்டு வருகின்றனர்.
அரசு கொண்டுவந்துள்ள ‘வெற்றி பயணம்’ திட்டத்தால் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்பது நகரம் தாண்டி புறநகர், கிராமங்கள், எக்ஸ்பிரஸ் என விரிவடைந்துள்ளது. இதனால், இதுவரை குறுகிய தூரப் பயணங்களுக்கும், உள்ளூர் சந்தை மற்றும் மருத்துவமனை தேவை
களுக்கும் ஆட்டோக்களை நம்பியிருந்த பயணிகள் மொத்தமாக பஸ் நிறுத்தங்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். இதன் நேரடித் தாக்குதல் அடிமட்ட ஆட்டோ ஓட்டுநர்களின் தலையில் விழுந்துள்ளது.
இரண்டாம் கட்ட நகரங்களான திண்டுக்கல், தஞ்சாவூர், ஈரோடு, திருநெல்வேலி, தருமபுரி போன்ற மாவட்டங்களில் நிலைமை முற்றிலும் வேறு.
உள்ளூர் சந்தைக்கு காய்கறி வாங்கச் செல்லும் பெண்கள். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்லும் முதியவர்கள் மற்றும் தாய்மார்கள். பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பும் மாணவிகள்.
இப்போது பேருந்துகள் கிராமத்தின் மூலை முடுக்கெல்லாம் இலவசமாக இயக்கப்படுவதால், ₹50 அல்லது ₹100 கொடுத்து ஆட்டோ பிடிக்க மக்கள் தயங்குகிறார்கள். “அரை மணி நேரம் பஸ்ஸுக்கு காத்திருந்தாலும் பரவாயில்லை, காசு மிச்சமாகுது” என்று பெண்கள் பஸ்களையே தேர்ந்தெடுக்கின்றனர். இதனால் உள்ளூர் ஆட்டோ ஸ்டாண்டுகளில் காலையிலிருந்து இரவு வரை ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு ஈ ஓட்டிக்கொண்டி
ருக்கின்றன. ஒரு ஆட்டோ ஓட்டுநருக்கு நாள் ஒன்றுக்கு ஏற்படும் செலவுகள் சாதாரணமானவை அல்ல.
ஆட்டோ வாங்கியதற்கான மாதத் தவணை: ₹6,000 முதல் ₹9,000 வரை. பெட்ரோல், டீசல் அல்லது சிஎன்ஜி எரிபொருள் செலவு. தினசரி பராமரிப்பு மற்றும் பஞ்சர் செலவுகள். ஆண்டுக்கு ஒருமுறை கட்ட வேண்டிய எஃப்.சி மற்றும் இன்சூரன்ஸ்.
“ஒரு நாளைக்கு குறைஞ்சது ₹800 முதல் ₹1,000 சம்பாதிச்சாதான் எரிபொருள் போட்டு, வீட்டு செலவுக்கு ₹300 எடுத்துட்டு போக முடியும். கடந்த சில நாட்களா ₹100 கூட தேறல. சொந்த வண்டி வச்சிருக்க
வங்களே திண்டாடுறாங்க. வாடகைக்கு வண்டி எடுத்து ஓட்டுறவங்க உரிமையாளருக்கு கொடுக்க வேண்டிய ₹250 வாடகையை கூட கொடுக்க முடியாம கையை பிசையுறாங்க” என்கிறார் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே 15 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வரும் ரத்தினம்.
தமிழகம் முழுவதும் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆட்டோ ஓட்டும் தொழிலை மட்டுமே நம்பி வாழ்க்கையை நகர்த்துகின்றன. இதில் பெரும்பாலானவர்கள் நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
ஏற்கனவே இருசக்கர வாகனங்களின் பெருக்கம் மற்றும் இருசக்கர பைக்-டாக்ஸிகளின் வருகையால் ஆட்டோ தொழில் கணிசமான சவாலைச் சந்தித்து வந்தது. அந்தச் சூழலில், கட்டணமில்லா பஸ் திட்டம் எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது, ஆட்டோ தொழிலின் கடைசி மூச்சையும் நிறுத்துவது போல அமைந்துள்ளது.
புதிய தலைமுறையினர் ஆட்டோ ஓட்டும் தொழிலுக்கு வராமல் இத்தொழில் அடியோடு முடங்கும் நிலை.
வாழ்வாதாரத்தை இழந்து லட்சக்கணக்கான குடும்பங்கள் கடுமையான கடன் சுமைக்குள் தள்ளப்படும் சூழல்.
அரசு பெண்களின் நலனுக்காகத் திட்டங்களை முன்னெடுப்பது பாராட்டுக்குரியதுதான். ஆனால், அதே சமயம் மற்றொரு உழைக்கும் வர்க்கமான ஆட்டோ ஓட்டுந
ர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகாமல் அரசு பாதுகாக்க வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கை.
ஆட்டோ தொழிலா
ளர்களின் நல வாரியம் மூலமாக நேரடி நிதி உதவி வழங்குவது, ஆட்டோக்க
ளுக்கான எரிபொருள் மானியம் அல்லது மின்சார ஆட்டோக்களாக மாற்ற மானியம் தருவது போன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும். இல்லையெனில், 2-ம் கட்ட நகரங்களின் அடையாளமாக விளங்கிய ஆட்டோக்களின் சத்தம் வெகுவிரைவில் முற்றிலும் அடங்கிவிடும் அபாயம் உள்ளது.