சென்னை, அக். 7-

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (எஸ்ஐஆர்) மூலம் அதிகமாக வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்ட தொகுதிகளிலேயே தவெக எளிதாக வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம், எதிர்க்கட்சிகளை வீழ்த்துவதற்கான ஆயுதமாக எஸ்ஐஆரை பயன்படுத்தி தேர்தல் ஆணையம் வாக்காளர்களை நீக்கியதா என்ற கேள்வி எழுந்துள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியில்(எஸ்ஐஆர்) முறைகேடுகள் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக எடுத்த முடிவுகள் காரணமாக ஏராளமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக, தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி பதிவு செய்த 14 எதிர்ப்புகள் மற்றும் ஆட்சேபங்களையும் மீறி ஞானேஷ்குமார் முடிவுகளை எடுத்துள்ளார். படிவம் 6 மாற்றங்கள் செய்துள்ளார் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதில் உச்ச நீதிமன்றமும் திருத்தப்பட்ட படிவம் 6க்கு ஒப்புதல் தரவில்லை என திட்டவட்டமாக கூறி விட்டது. இந்த நிலையில், கடந்த ஏப்ரலில் நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் நடைபெற்ற எஸ்ஐஆர் பணியின் போது 74.07 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் மட்டும் 10 சதவீதத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தொடர்பான ஆய்வில், எஸ்ஐஆரில் வாக்காளர் நீக்கம் குறைவாக இருந்த தொகுதிகளில் தவெக வெற்றி பெறுவதில் சிரமப்பட்டுள்ள நிலையில், அதிக அளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் இந்த கட்சி எளிதாக வெற்றியை பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாத வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் எண்ணிக்கையையும், எஸ்ஐஆருக்கு முந்தைய வாக்காளர் எண்ணிக்கையையும் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் ஒப்பிட்டு, வாக்காளர் எண்ணிக்கை எவ்வளவு குறைந்துள்ளது என்பது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில், மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், 19 தொகுதிகளில் 10,000 வாக்காளர்கள் வரை மட்டுமே குறைந்திருந்தது.

இந்த 19 தொகுதிகளில், தவெக – 2, திமுக – 7, அதிமுக -6 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ன. இதுபோல், 10,000 முதல் 20,000 வரை வாக்காளர்கள் நீக்கப்பட்ட 80 தொகுதிகளில், தவெக – 22, திமுக- 20, அதிமுக – 24, இதர கட்சிகள் -14 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. மேலும் 66 தொகுதிகளில், 20,000 முதல் 30,000 வாக்காளர்கள் வரை குறைந்திருந்தனர். இந்த தொகுதிகளில் தவெக – 32, திமுக – 21, அதிமுக – 11, இதர கட்சிகள் – 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுளளன.

எஸ்ஐஆருக்கு முன்னும் பின்னும் ஒப்பிடும்போது 37 தொகுதிகளில், 30,000 முதல் 50,000 வாக்காளர்கள் வரை நீக்கப்பட்டிருந்தனர்.

இங்கு தவெகவுக்கு பெரிய அளவில் சாதகமாக இருந்துள்ளது. அதாவது இந்தத் தொகுதிகளில், தவெக -24, திமுக – 8, அதிமுக – 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. இதுபோல், 50,000 முதல் 80,000 வரை வாக்காளர்கள் நீக்கப்பட்ட 22 தொகுதிகளில் தவெக – 18, திமுக – 3, அதிமுக – 1 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன. இதை விட முக்கியமாக 10 தொகுதிகளில் 80,000க்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர். இந்த 10 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்று விட்டது. எஸ்ஐஆர் நடத்தியதே எதிர்க்கட்சிகளை வீழ்த்துவதற்காகத்தான் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள் முன்வைத்து வரும் நிலையில், இதற்கு முக்கிய ஆதாரமாகவே இந்த புள்ளி விவரம் பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரத்தை தீவிரமாக முன்னெடுத்துச் செல்லும் கரப்பான் பூச்சி கட்சி, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது. சிஜெபி கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே தலைமையில் நடந்த போராட்டத்தில் ஞானேஷ்குமாரை ‘வாக்குத்திருடன்; ஆட்சித் திருடன்’ என விமர்சித்து கோஷம் எழுப்பினர். பாஜவைத் தீவிரமாக எதிர்த்ததால் மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன், மம்தா பானர்ஜி ஆகியோர் தோற்கடிக்கப்பட்டனர். இது எதேச்சையாக நடந்தது அல்ல. எஸ்ஐஆர் மூலம், பலம் வாய்ந்த மாநிலங்களை தோற்கடிப்பதே பாஜவின் நோக்கமாக இருந்தது. என அபிஜீத் தீப்கே கூறியுள்ளார்.

வாக்குச் செலுத்த முடியாமல் செலுத்த முடியாமல் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். ஒரு கட்சியை வீழ்த்த முன்னரே திட்டமிட்டு இதுபோன்று செய்யப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் சாரை சாரையாக வந்தும் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்று விட்டனர். இதுதான் மேற்கு வங்கம், கேரளம், தமிழ்நாடு மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் வீழ்த்தப்பட்டுள்ளன. அதேநேரத்தில் அசாமில் பாஜவையும், புதுச்சேரியில் பாஜ கூட்டணியையும் மட்டும் வெற்றி பெற வைத்துள்ளனர் என சிஜெபியின் அபிஜீத் தீப்கே குற்றம் சாட்டியுள்ளார். இதே கருத்தை பல்வேறு கட்சி தலைவர்களும் முன்வைத்துள்ளனர்.

இந்த எஸ்ஐஆர் மூலம், தமிழ்நாட்டில் பாஜ எதிர்பார்த்தபடியே திமுகவை தோல்வியடைய செய்துள்ளனர். இதனால் தேர்தல் ஆணையம் முழுக்க முழுக்க ஓட்டுத் திருட்டில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் அரசியலமைப்பு உரிமையை பறித்துள்ளனர். எனவே தான் தேர்தலை ரத்து செய்து விட்டு நேர்மையாக தேர்தலை நடத்த சிஜேபி மற்றும் பல்வேற கட்சி தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர். உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்க மாநிலங்களில் மறு தேர்தல் நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறைகேடுகள் தொடர்பான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள், உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனங்களுக்கு மத்தியில் தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் மீதான மேற்கண்ட ஆய்வு, இந்த முறைகேடுகளை நிரூபிப்பது போல அமைந்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் வாக்காளர்கள் 10 சதவீதத்துக்கு மேல் நீக்கப்பட்ட 10 மாவட்டங்கள்

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு எஸ்ஐஆர் மேற்கொள்ளப்பட்டது இதில் 10 மாவட்டங்களில் அடங்கிய சுமார் 103 தொகுதிகளில் 10 சதவீதத்துக்கு மேல் 35 சதவீதம் வரை வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 26 தொகுதிகளில் 25% அல்லது அதற்கு மேல் குறைந்துள்ளது. உதாரணமாக ஆயிரம் விளக்கு (35.4%), அண்ணாநகர் (35.3%), திருப்பூர் (தெற்கு) (28.9%), பெரம்பூர் (25.1%) உள்ளிட்ட தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கை 25 சதவீதத்துக்கும் மேல் குறைந்துள்ளது. சென்னையில் மட்டும் 6 தொகுதிகளில் 33 சதவீதத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.