விரகனூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பா. சந்திரன் தலைமை வகித்தார். ஒன்றிய பொறியாளர் சோலைமலை முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் ஊராட்சியின் வளர்ச்சி மற்றும் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் குறித்து பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
ஊராட்சியில் உள்ள கம்மாய் புறம்போக்கு மற்றும் கால்வாய் புறம்போக்கு நிலங்களை முறையாக சர்வே செய்து, ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், விரகனூர் ஊராட்சியில் உள்ள மதகு அணை பூங்காவை தூய்மைப்படுத்தி, புதியதாக புனரமைக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு மைதானங்கள் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதேபோல், பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் புதிய சாலைகள் அமைத்தல், குடிநீர் குழாய்கள் பதித்தல், தெருவிளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கிராம சபைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் கலந்து கொண்டு தங்களது கருத்துகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்தனர்.
கூட்டத்தின் நிறைவில் ஊராட்சி செயலாளர் எஸ். ராஜாமணி நன்றியுரை வழங்கினார்.