அண்ணா நினைவிடத்தில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
த.வெ.க. தலைவர் விஜய் அ.தி.மு.க. தலைவர்களான எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் ரோல் மாடல் என்று கூறிக்கொண்டு அ.தி.மு.க.வை ஊழல் கட்சி என்று விமர்சிக்கிறார். இது பற்றி அவரது கட்சியில் சேர்ந்து உள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் அவர் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
அ.தி.மு.க. வாக்குகள் என்றும் எங்களுக்குதான் கிடைக்கும். விஜய் நினைப்பதை போல அவருக்கு கிடைக்காது. விஜய்யின் பேச்சை பார்த்து அ.தி.மு.க.வினர் ஏமாற மாட்டார்கள். தேர்தலுக்குப் பிறகு எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரை அமைச்சர்களாக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அதே நேரத்தில் அதற்காக எந்த அழுத்தமும் கொடுக்கப்போவது இல்லை.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆட்சியாகவே தி.மு.க. ஆட்சி உள்ளது. வருகிற தேர்தலில் உறுதியாக தி.மு.க. ஆட்சியை தேசிய ஜனநாயக கூட்டணி முடிவுக்கு கொண்டு வரும். தி.மு.க. ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர மக்கள் முடிவு செய்து விட்டார்கள். விஜய் தி.மு.க.வை வீழ்த்தும் வேலையை மட்டும் பார்க்க வேண்டும். விஜய் எங்களுக்கு எதிரி அல்ல. எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க. தான். இவ்வாறு அவர் கூறினார்.