பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் அண்ணாவின் சிலை மற்றும் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் டெல்லி அண்ணா -கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது திருவுருவ படத்திற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, திருச்சி சிவா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதனிடையே திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில், திராவிட இயக்கத்தின் கொள்கைப் பெருஞ்சுடராக, தமிழர் மொழி, உரிமை, இனமானம் மீட்டு தந்த தகத்தகாய சூரியன் பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாள். தமிழ்நாட்டின் தடம் மாற்றிய தன்னிகரற்றத் தலைவரான அவர் காட்டிய சமூகநீதிப் பாதையில் வீறுகொண்டு நடைபோடுவோம். மாநில உரிமைகளைக் காத்து நிற்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.