திருப்பூர், செப். 29-
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் களம் நாளுக்கு நாள் அனல் பறந்து கொண்டிருக்கிறது.
ஆனால் அந்த அனல் அரசியல் கட்சிகளின் பலப்பரீட்சையைத் தாண்டி, தொகுதி மக்களின் கோபத் தீயாக மாறி இருப்பதுதான் தற்போதைய முக்கிய விவாதம்.
சமூக வலைத்தளங்களில் கட்சி ஆதரவாளர்கள் நடத்தும் பிரச்சாரங்களுக்கும், தாராபுரத்தின் கிராமங்களில் நிலவும் எதார்த்தமான உண்மைக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உருவாகியுள்ளது. உள்ளூர் மக்களின் மனநிலையை பார்த்தால், தவெக இந்தத் தொகுதியில் தனது குறைந்தபட்ச வாக்கு சதவீதமான ‘டெபாசிட்’ தொகையைக் கூட காப்பாற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக ஆனவர் சத்யபாமா. ஆனால் பதவிக்கு வந்த சில நாட்களிலேயே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். அந்த முடிவே இப்போது அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளது.
“எங்கள் விரலில் வைத்த மை கூட இன்னும் அழியவில்லை, அதற்குள் பதவியை விட்டுவிட்டு கட்சி மாறிவிட்டீர்களே? எங்களைக் கேட்டுவிட்டுத்தான் ராஜினாமா செய்தீர்களா?” என்று கிராமப்புற வாக்காளர்கள் அவரை நேருக்கு நேர் நிறுத்தி கேள்வி கேட்கிறார்கள். தாராபுரத்தின் பட்டிதொட்டி எங்கும், கிராமப் பஞ்சாயத்துகள் முதல் பேரூராட்சிகள் வரை சத்யபாமா செல்லும் இடங்களில் எல்லாம் “துரோகி! துரோகி!” என்ற கோஷங்கள் பலமாக எதிரொலிக்கின்றன. இது அதிமுக அல்லது திமுக ஆகிய கட்சிகளின் எதிர்ப்பாக மட்டும் இல்லாமல், பொதுவான நடுநிலை வாக்காளர்களின் நேரடி கோபமாகவும் வெடிக்கிறது.
எந்த மக்களிடம் வாக்கு கேட்டுச் செல்கிறாரோ, அதே மக்களை நேரில் சந்திக்க முடியாமல் கடுமையான ரிசர்வ் போலீஸ் பாதுகாப்புடன் வீதி வீதியாக சத்யபாமா வலம் வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் விவசாயிகள் உப்பாறு அணை நீர் பங்கீடு மற்றும் அடிப்படை பிரச்சனைகளை முன்வைத்து தவெகவின் பிரச்சார வாகனத்தை முற்றுகையிட்டு முழக்கமிட்டு வருகின்றனர். மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கும்போது பிரச்சாரப் பேச்சை பாதியிலேயே நிறுத்திவிட்டு வேட்பாளர் புறப்பட்டுச் செல்லும் நிலைமை பல இடங்களில் காணப்படுகிறது.
பொதுமக்களின் இந்த அமைதியான எதிர்ப்பைக் கையாள்வதில் காவல்துறை கடுமையான முறைகளைக் கையாள்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சமீபத்தில், மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வேட்பாளர் காரை திருப்பிக்கொண்டு கிளம்பிய ஒரு நிகழ்வை, அங்கு நின்ற 15 வயது சிறுவன் ஒருவன் தனது செல்போனில் வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்தச் சிறுவனைப் பிடித்துச் சென்று போனைப் பறிமுதல் செய்ததோடு, மேலும் ஐந்து பேரை அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்ததாக வெளியான தகவல்கள் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. அமைதியான முறையில் கேள்வி கேட்கும் பொதுமக்களின் உரிமையை நசுக்குவது போன்ற நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் இன்னும் கூடுதல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரத்தின் சுமார் 90 சதவீதத்துக்கும் அதிகமான பகுதிகளில் பிரச்சார வாகனம் நுழையும் போதே எதிர்ப்பு கூச்சல்கள் எழுந்து விடுகின்றன. பல இடங்களில் மைக் பிடித்துப் பேசுவதற்கு கூட வாய்ப்பு கிடைக்காமல், மக்கள் காட்டும் தீவிர எதிர்ப்பால் திரும்பிச் செல்ல வேண்டிய சூழலே நிலவுகிறது.
திரைப்பட வசனங்களோ, இணையத்தில் உருவாக்கப்படும் மாயையான பிம்பங்களோ களத்தில் மக்களின் கோபத்தைத் தணிக்க உதவவில்லை. கள நிலவரம் இப்படி இருக்க, தேர்தல் அதிகார அமைப்புகள் ஏதேனும் மாயாஜாலம் செய்தால் மட்டுமே தவெக இங்கு வெற்றி பெற முடியும் என்கிற அளவுக்கு தாராபுரத்தின் தற்போதைய அரசியல் சூழல் மிக மோசமாக மாறியுள்ளது. களத்தின் குரல் வெளிப்படையாகச் சொல்வது ஒன்றே ஒன்றுதான்.. சத்யபாமாவுக்கு இம்முறை டெபாசிட் இழப்பு என்பது கிட்டத்தட்ட உறுதியாகி வருகிறது.