சென்னை, செப். 29-
மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவாக, செப்.30ம் தேதி பொதுக்கூட்டம் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி திட்டமிட்டிருக்கிறது. இந்நிலையில், கம்யூனிஸ்ட்டுகள் பக்கம் நிற்பேன் என சொல்லிட்டு.. கட்சி மாறி நிற்கிறார் திருமாவளவன் என்று கம்யூனிஸ்ட் ஆதரவாளர் பேராசிரியர் அருணன் விமர்சித்திருக்கிறார்.
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளும், விசிகவும் இடம் பெற்றிருந்தன. தேர்தல் முடிவுகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக வந்த நிலையில், விஜய் முதலமைச்சராக கூட்டணி கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டது. அப்போது தவெக நிர்வாகிகள் கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கேட்டிருந்தனர்.
சிபிஐ, சிபிஎம் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்கள் மாநில செயற்குழு கூட்டி, இது குறித்து ஆலோசித்து முடிவெடுத்து பின்னர் மாநிலக் குழுவில் ஒப்புதல் பெற்று விஜய்க்கு ஆதரவளிப்பதாக அறிவித்தன. ஆதரவு விஷயத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடுதான் எங்களின் நிலைப்பாடு.. அவர்கள் என்ன முடிவெடுக்கிறார்களோ அதையேதான் நாங்களும் எடுப்போம் என்று திருமாவளவன் அறிவித்திருந்தார். ஆட்சி அமைக்க உரிமை கோர கெடு நெருங்கி
க்கொண்டிருந்தது. விடிந்தால் கெடு முடிந்துவிடும் என்று இருந்த நிலையில்.. ஒரு நாள் முன்பே கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை அறிவித்துவிட்டன. ஆனால், திருமாவளவன் இழுக்கடித்தார்.
கம்யூனிஸ்ட்களின் நிலைப்பாடுதான் உங்களின் நிலைப்பாடு என்று சொன்னீர்களே! அவர்கள் நேற்றே தங்களின் நிலைப்பாட்டை சொல்லிவிட்டார்கள். நீங்கள் ஏன் இன்னும் சொல்லவில்லை என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். “நாங்கள் தனியாக கட்சி வைத்திருக்கிறோம். அதில் பேசிதான் முடிவெடுக்க முடியும்” என்று திருமாவளவன் பதிலளித்திருந்தார். இந்த பதில்.. திருமாவளவனின் பேச்சு குறித்து பல்வேறு விவாதங்களை கிளப்பியிருந்தது. இப்படி இருக்கையில், இடைத்தேர்தலில் திருமாவளவனின் நிலைப்பாடும் தற்போது கேள்விகளை ஏற்படுத்தியிருக்கிறது.
அதாவது கம்யூனிஸ்ட்டுகளின் பக்கம்தான் நிற்பேன் என்று திருமாவளவன் சொன்னார். கம்யூனிஸ்ட்டுகள் இடைத்தேர்தலில் தனியாக களமிறங்கியிருக்கின்றனர். காரணம், அதிமுகவிலிருந்து எம்எல்ஏ ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததால்தான் இந்த இடைத்தேர்தலே வந்திருக்கிறது. இப்படி இடைத்தேர்தலை உருவாக்குவது ஜனநாயக விரோதம் என்று கூறி தனியாக களமிறங்கியிருக்கின்றன.