மதுரை, அக். 4-

வடமாநிலங்களின் ஆன்மிக, தொழிற்புற நகரங்களில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயில்களை மதுரை வழியாக இயக்கினால் மருத்துவம் மற்றும் ஆன்மிக சுற்றுலாவும், தென்மாவட்ட பொருளாதாரமும் வளர்ச்சியடையும் என பயணிகளும் வர்த்த

கர்களும் எதிர்ப்பார்க்கி

ன்றனர்.

தென் தமிழகத்தின் முக்கிய ஆன்மிகம், கலாசாரம், வணிக நகராகத் திகழும் மதுரையை மையமாக கொண்டு, வடமாநில ரயில் சேவைகளை ஏற்படுத்த வேண்டும். காரணம், மதுரை மீனாட்சியம்மன், ராமேஸ்வரம் ராமநாத

சுவாமி கோயில்கள் தென்னிந்திய ஆன்மிகச் சுற்றுலாவின் இரு முக்கிய துாண்களாக விளங்குகின்றன. வடமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்து செல்கின்றனர்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர், பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் கன்டோன்மென்ட், உத்திரபிரதேச மாநிலம் அயோத்தி, வாரணாசி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வாராந்திர ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், தாம்பரம், சென்னை எழும்பூர் (போட் மெயில், சேது எக்ஸ்பிரஸ்), கோவை ஆகிய மாநில எல்லை நகரங்களில் இருந்தும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவை அனைத்தும் மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படுகின்றன.

தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் நிறைவடைந்து விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இதன் மூலம் தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களை சேர்ந்த நோயாளிகளும் உயர் மருத்துவ சிகிச்சைக்காக மதுரைக்கு வருவது அதிகரிக்கும். இந்நிலையில், வடமாநில ரயில்கள் மதுரை வழியாக இயக்கினால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், அவர்களுடன் வரும் உதவியாளர்கள் சிரமமின்றி வந்து போக முடியும்.

வடமாநில பக்தர்களும் ஒரே பயணத்தில் மீனாட்சியம்மன், ராமநாதசுவாமி கோயில்களை தரிசிக்க முடியும். இது சுற்றுலாத் துறைக்கும், உள்ளூர் வியாபாரிகளுக்கும் புத்துயிர் கொடுக்கும் என்பதோடு, தென்னிந்தியாவின் முதன்மை மருத்துவம் மற்றும் ஆன்மிக சுற்றுலா மையமாக மதுரையை மாற்ற உதவும்.

பயணிகள், வர்த்தக அமைப்பினர் கூறுகையில், ‘‘ஆன்மிக ஸ்தலங்களான ராமேஸ்வரம், மதுரை, பழநியை இணைக்கும் வகையில் ராமேஸ்வரத்தில் இருந்து கோவைக்கு புதிய ரயில் சேவையை தொடங்க வேண்டும். இதனால், ஆன்மிக பக்தர்களுக்கு மட்டுமன்றி, தொழில் நிமித்தமாக கோவை செல்லும் வியாபாரிகள், வெளி மாநில பயணிகள் மற்றும் மீனவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். புதிதாக இயக்கப்படவுள்ள சென்னை – ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயிலையும் மதுரை வழியாக இயக்க வேண்டும்’’ என்றனர்.