தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோரும் இருந்தனர். தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு நிலவரம் மற்றும் தி.மு.க. அரசுக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை அடங்கிய மனுவை, இந்த சந்திப்பின் போது எடப்பாடி பழனிசாமி வழங்கியதாக தெரிகிறது.

தமிழக சட்டசபை வரும் 20-ம் தேதி கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், கவர்னர் உரையுடன் இந்த சட்டசபை கூடுவது வழக்கம். இத்தகைய சூழலில், எடப்பாடி பழனிசாமி தமிழக கவர்னரை சந்தித்தது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த இரண்டு தினங்களாக தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அமித்ஷாவை அ.தி.மு.க மூத்த நிர்வாகிகளில் ஒருவரான எஸ்.பி. வேலுமணி இரண்டு முறை தனியாக சந்தித்து பேசியிருந்தார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது கவர்னரை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்புக்கு பின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

2021 முதல் தி.மு.க. ஆட்சியில் நடந்த ஊழல் பட்டியலை ஆதாரங்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவியிடம் கொடுத்துள்ளோம். இது தொடர்பாக விசாரணை கமிஷம் அமைத்து விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளோம்.

தி.மு.க. ஆட்சியில் தமிழகம் கடன் சுமையில் இருக்கிறது. கடந்த 56 மாதங்களில், ரூ.4 லட்சம் கோடி கடன் வாங்கி இருக்கிறது. இதுதான் தி.மு.க.வின் சாதனை. துறை வாரியாக நடந்த ஊழல்களை கவர்னரிடம் கொடுத்துள்ளோம். மொத்தமாக ரூ. 4 லட்சம் கோடி தி.மு.க. ஆட்சியில் ஊழல் நடைபெற்றுள்ளது.

ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷனின் விசாரணை நடக்க வேண்டும். அதே போல் மாணவர்களுக்கான லேப்டாப் திட்டத்தை முன் கூட்டியே செயல்படுத்தி இருக்க வேண்டும். தி.மு.க.வுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதன் காரணமாகவே பொங்கல் பரிசாக ரூ. 3 ஆயிரம் அறிவித்துள்ளார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.