தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ரெயில்வே திட்டங்களுக்கான நிதியை விரைந்து வழங்கிடவும், முக்கியமான திட்டங்களை மீண்டும் தொடங்கிடவும், தமிழகத்திற்கு கூடுதலாக புதிய ரெயில்வே திட்டங்களை அனுமதித்திடவும் ரெயில்வே அமைச்சகத்திற்கு உரிய அறிவுரைகளை வழங்கிடுமாறு கோரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார். அதில், தமிழகத்தில் ரெயில் திட்டங்களுக்கு தேவையானவற்றில் 24 சதவீத நிலத்தையே மாநில அரசு கையகப்படுத்தியுள்ளது. நிலம் கையகப்படுத்தியதற்கு ரூ.1,465 கோடி தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கவில்லை என முதல்வர் கூறியுள்ளது அடிப்படை ஆதாரமற்றது.

மதுரை - தூத்துக்குடி ரெயில்வே திட்டத்திற்கு 91 சதவீத நிலம் கையகப்படுத்தும் பணி முடியவில்லை. திண்டிவனம் - செஞ்சி திருவண்ணாமலை ரெயில் திட்டத்திற்கு 86 சதவீத நிலம் கையகப்படுத்தப்படவில்லை. ராமேஸ்வரம் - தனுஷ்கோடி திட்டத்திற்கு மாநில அரசு ஒத்துழைக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.