பாராளுமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இதே போல், டெல்லியில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி காவல்துறையின் மின்னஞ்சல் முகவரிக்கு நேற்று காலை 8.30 மற்றும் 9.00 மணியளவில் இரண்டு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதில், டெல்லி காலிஸ்தானாக மாறும். பிப். 13, பகல் 1.11 மணிக்கு பாராளுமன்றத்துக்குள் குண்டுவெடிக்கும் என்று அப்சல் குரு மற்றும் காலிஸ்தான் தேசிய இராணுவத்தின் பெயரில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பாராளுமன்ற சுற்றுப்புறத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளின் பெயர்களை குறிப்பிட்டு குண்டுவெடிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டு டெல்லி காவல்துறையினர், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பத்திரமாக வெளியேற்றினர். பாராளுமன்ற வளாகத்திலும் காவல்துறையினர், பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, தீவிர சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.