மதுரை, அக்.6:
உயிரைக் காக்கும் உன்னதமான தானமான ரத்த தானத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடையே அதிகரிக்கும் வகையில், மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா,
தேசிய தன்னார்வ ரத்தக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வெள்ளிவிழா கலையரங்கத்தில் நடைபெற்ற ரத்தக் கொடையாளர்களின் உறுதிமொழியேற்பு மற்றும் பாராட்டு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா கலந்து கொண்டு, ரத்த தானம் செய்த கொடையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி கவுரவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே ஏற்படுத்தும் நோக்கில், மதுரை மருத்துவக் கல்லூரியின் அங்கமாக செயல்படும் மருத்துவத் துணை அறிவியல் பிரிவு, மருந்தியல் கல்லூரி, செவிலியர் கல்லூரி மற்றும் செவிலியர் பள்ளி ஆகியவற்றில் ரத்தக் கொடையாளர்கள் மன்றத்தின் கிளைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.
அவசர காலங்களில் தேவையான ரத்தம் கிடைப்பது பல உயிர்களை காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. விபத்துகளில் சிக்குபவர்கள், அறுவை சிகிச்சை மேற்கொள்பவர்கள், பிரசவிக்கும் தாய்மார்கள் உள்ளிட்ட பல்வேறு நோயாளிகளுக்கு ரத்தம் இன்றியமையாததாக உள்ளது. இதனால், தகுதியுள்ள அனைவரும் தன்னார்வத்துடன் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
குறிப்பாக, மருத்துவம் சார்ந்த கல்வி நிறுவனங்களிலேயே ரத்தக் கொடையாளர்கள் மன்றத்தின் கிளைகளை தொடங்கியிருப்பது, மாணவர்களிடையே ரத்த தானத்தின் அவசியத்தை எடுத்துச் செல்வதுடன், எதிர்காலத்தில் தொடர்ந்து ரத்த தானம் செய்யும் தன்னார்வலர்களை உருவாக்குவதற்கும் உதவும் என மருத்துவத் துறையினர் தெரிவித்தனர்.
ரத்த தானத்தை ஒரு சமூகப் பொறுப்பாக மாற்றும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா மேற்கொண்டு வரும் இத்தகைய முன்னெடுப்புகள் பாராட்டுக்குரியவை எனவும், இதன் மூலம் மதுரை மாவட்டத்தில் தன்னார்வ ரத்த தான இயக்கம் மேலும் வலுப்பெறும் எனவும் இராசாசி அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் அருள் சுந்தரேஷ்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அ.கல்லாணை, இராசாசி அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் அருள் சுந்தரேஷ்குமார் மாவட்ட சுகாதார அலுவலர் மரு. பொற்செல்வன், மாவட்ட இரத்தப் பரிமாற்று அலுவலர் மரு. சிந்தா, மருத்துவர்கள், மாணவ-மாணவியர், குருதிக்கொடையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
இரத்தத்தை எந்த ஒரு தொழிற்சாலையிலும் செயற்கையாக உற்பத்தி செய்துவிட முடியாது. சக மனிதர்களின் தாராள மனப்பான்மையினாலும் தன்னார்வ இரத்த தானத்தினாலும் மட்டுமே அது சாத்தியமாகிறது.
நீங்கள் வழங்கும் ஒவ்வொரு சொட்டு இரத்தமும் பெரிய அறுவை சிகிச்சைகள், விபத்து மற்றும் அவசரச் சிகிச்சைகள், மகப்பேறு காலங்கள், புற்றுநோய் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் எண்ணற்ற உயிர்களைக் காக்கும் ஆற்றல் கொண்டது.
இரத்த தானம் என்பது மிகவும் எளிய, பாதுகாப்பான மற்றும் மனிதநேயத்தின் மிக உயர்ந்த சேவையாகும்.
தேவையான நேரத்தில், தகுந்த இடத்தில் பாதுகாப்பான இரத்தம் நோயாளிகளுக்குக் கிடைப்பதை உறுதிசெய்து உயிர்களைக் காக்க, பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்ய முன்வர வேண்டும்.
மதுரை மாவட்டத்தில் இயங்கும் 21 உரிமம் பெற்ற இரத்த மையங்கள் (2 அரசு மையங்கள் உட்பட) மூலம் மக்கள் தொகையில் 2.27% இரத்த சேகரிப்பு விகிதம் எட்டப்பட்டு, ஆண்டு இலக்கைத் தாண்டி சாதனை படைக்கப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு மற்றும் மேலாண்மை காரணமாக இரத்தக் கூறுகள் வீணாகும் விகிதம் தேசிய சராசரியைவிடக் குறைவாக 1.3% என்ற அளவில் பராமரிக்கப்படுகிறது.
அரசுத் துறையில் 2025-ஆம் ஆண்டில் 31982 யூனிட்களும், 2026-ஆம் ஆண்டில் இதுவரை 23091 யூனிட்களும் இரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளன (2025-ல் 253 முகாம்கள் நடத்தப்பட்டன).
அரசு இரத்த மையங்கள் தரம் மற்றும் ABDM (Ayushman Bharat Digital Mission) டிஜிட்டல் திட்டங்களுடன் 100% இணைக்கப்பட்டுள்ளதுடன், BBMS(Blood Bank Management System) மூலம் 95%-க்கும் அதிகமான இரத்த சேகரிப்பு முழுமையாகக் கண்காணிக்கப்படுகிறது.
அரசு இராசாசி மருத்துவமனை ஏழை, எளிய நோயாளிகளின் பயன்பாட்டிற்காக 75,000-க்கும் மேற்பட்ட யூனிட் இரத்தம் மற்றும் இரத்தக் கூறுகளை வழங்கி மாநில அளவில் முன்னணி மையமாகச் செயல்படுகிறது.
அமெரிக்கன் கல்லூரி 3-க்கும் மேற்பட்ட இரத்த தான முகாம்கள் மூலம் 784-க்கும் அதிகமான யூனிட் இரத்தம் வழங்கி கல்வி நிறுவனங்களில் முதன்மைப் பங்களிப்பாளராகத் திகழ்கிறது.
எதிர்கால இளம் தானதாரர்களை உருவாக்க அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் 'Blood Donors Club' தொடங்கப்பட வேண்டும்.
இரத்தப் பற்றாக்குறை ஏற்படாமல் சீரான விநியோகத்தை உறுதிசெய்ய, நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் தங்களது 2027-ஆம் ஆண்டிற்கான இரத்த தான முகாம் திட்டங்களை (Advanced Tour Programs - ATPs) முன்கூட்டியே மாவட்ட நிர்வாகத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்தார்.