மதுரை: மக்கள் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டிய மக்கள் பிரதிநிதிகளே சாலை பாதுகாப்பு விதிகளை மீறுவதாக எழுந்துள்ள புகார், அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரங்களின்போது தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் பயணித்ததாகவும், அவர்களுடன் சென்ற ஆதரவாளர்களும் தலைக்கவசம் அணியாமல் வாகனங்களில் சென்றதாகவும் கூறி தமிழக முதலமைச்சருக்கு அதிகாரப்பூர்வ மனு அளிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தை இயற்றுபவர்களே சட்டத்தை மீறலாமா?

சாலை பாதுகாப்பு விதிகள் பொதுமக்களுக்கு மட்டுமே பொருந்துமா? மக்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

மனுவில், தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இதுபோன்ற செயல்கள் பொதுமக்களுக்கு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், அரசியல் செல்வாக்கு இருந்தால் சாலை விதிகளை மீறலாம் என்ற மனநிலை உருவாகிவிடக் கூடாது என்றும், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

‘₹10 ஆயிரம் கொடுத்து தலைக்கவசம் வாங்கித் தருகிறேன்’ – மனுதாரரின் அதிரடி!

சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலைக்கவசம் வாங்குவதற்காக தனது சொந்த செலவில் ₹10 ஆயிரம் வழங்கத் தயாராக இருப்பதாக மனுதாரர் B. சர்மஷ்கான் தெரிவித்துள்ளார். மேலும், தேவையெனில் அவர்களுக்கு இலவசமாக தலைக்கவசம் வாங்கித் தரவும் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பில் இருப்பவர்களே சாலை விதிகளை கடைப்பிடிக்கவில்லை என்றால், பொதுமக்களிடம் சட்டத்தை மதிக்க வேண்டும் என்று எந்த அடிப்படையில் அறிவுறுத்த முடியும்?

சட்டம் அனைவருக்கும் சமம் என்ற நிலை நடைமுறையிலும் இருக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகளுக்கு முன்மாதிரி பொறுப்பு அதிகம். அந்தப் பொறுப்பிலிருந்து அவர்கள் விலகுகிறார்களா என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்பதே மனுதாரரின் கோரிக்கையாக உள்ளது.

மனுவுடன், தலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனத்தில் சென்றதாகக் கூறப்படும் சம்பவங்களுக்கான புகைப்பட ஆதாரங்களும் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.