அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்தும் மக்கள் பிரதிநிதிகள், மருத்துவ நிர்வாக நடைமுறைகள் மற்றும் தங்களது அதிகார வரம்பை முழுமையாக அறிந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பா. சர்மேஷ் கான் வெளியிட்டுள்ள கருத்தில் கூறியிருப்பதாவது:
அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்துவது தவறல்ல. ஆனால், அந்த ஆய்வு மக்களின் நலனுக்காக இருக்க வேண்டுமே தவிர, விளம்பரத்திற்காக இருக்கக்கூடாது. மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களிடம் கேள்வி கேட்பதற்கு முன்பு, மருத்துவமனையின் நிர்வாக நடைமுறைகள், ஆய்வின் நோக்கம் மற்றும் ஒரு எம்எல்ஏவின் அதிகார வரம்பு ஆகியவற்றை அறிந்துகொள்வது அவசியம்.
சி. வைகுந்தம் தொகுதி எம்எல்ஏ திரு. சரவணன், கடந்த 5 மாதங்களில் தொகுதி மக்களிடமிருந்து எத்தனை புகார்கள் பெற்றுள்ளார்? அவற்றில் எத்தனை புகார்களுக்கு நடவடிக்கை எடுத்துள்ளார்? எத்தனை பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு பெற்றுத் தந்துள்ளார்? என்பதற்கு முதலில் பதில் அளிக்க வேண்டும்.
ஒரு சட்டமன்ற உறுப்பினரின் முக்கிய பொறுப்பு, தொகுதி மக்களின் பிரச்சினைகளை சட்டமன்றத்திலும், சம்பந்தப்பட்ட அரசு துறைகளிடமும் எடுத்துச் சென்று தீர்வு காண்பதாகும். சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிடுவதால் மட்டும் மக்கள் பணி நிறைவேறிவிடாது.
**“மக்கள் பிரதிநிதியின் பணியை ‘லைக்’ மற்றும் ‘வியூஸ்’ எண்ணிக்கையால் அளவிட முடியாது. மக்களின் பிரச்சினைகளுக்கு கிடைக்கும் தீர்வுதான் உண்மையான அளவுகோல்”** என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழக முதலமைச்சர், தங்கள் கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு எம்எல்ஏக்களின் கடமைகள், அதிகார வரம்பு, சட்டமன்றப் பொறுப்புகள் மற்றும் அரசு நிர்வாக நடைமுறைகள் குறித்து முறையான பயிற்சி வழங்க வேண்டும் என்றும் பா. சர்மேஷ் கான் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் எதிர்பார்ப்பது காட்சிகளை அல்ல; நல்ல நிர்வாகத்தையும், பொறுப்பான மக்கள் பிரதிநிதித்துவத்தையும், தங்களது குறைகளுக்கான தீர்வையும்தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.