சென்னை: தொகுதி மறுவரையறை குறித்த ஆலோசனை செய்வதற்காக, முதல்வர் விஜய் தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டத்தில் 19 எம்பிக்கள் பங்கேற்றனர். திமுக, அதிமுக எம்பிக்கள் புறக்கணித்தனர்.

மத்திய அரசு செயல்படுத்தவிருக்கும் தொகுதி மறுவரையறை திட்டத்திற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், இது தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சி எம்பிக்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு முதல்வர் விஜய் அழைப்பு விடுத்திருந்தார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமானால், காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கு ஒப்புக்கொண்டால் பங்கேற்போம் என்று திமுக அறிவித்து விட்டது. அதேபோல, அதிமுகவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்று முடிவு செய்தனர்.

இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் முதல்வர் விஜய் தலைமையில் அனைத்துக் கட்சி எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தவெகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மதிமுகவைச் சேர்ந்த ராஜ்சபா மற்றும் லோக்சபா எம்பிக்கள் 19 பேர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் எம்பி சுதா, கர்நாடகாவில் கட்சி கூட்டத்தில் பங்கேற்றிருப்பதால், இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் ப.சிதம்பரம், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, விஷ்ணு பிரசாத், விஜய் வசந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பிக்கள் வெங்கடேசன், சச்சிதானந்தம், இந்திய கம்யூனிஸ்ட் எம்பிக்கள் செல்வராஜ், சுப்புராயன், மதிமுக எம்பி துரை வைகோ, முஸ்லிம் லீக் எம்பி நவாஸ் கனி ஆகியோர் பங்கேற்றனர். தமிழகத்தில் லோக்சபாவில் 39 எம்பிக்களும், ராஜ்யசபாவில் 18 எம்பிக்களும் என மொத்தம் 57 எம்பிக்கள் உள்ளனர். அதில், திமுகவைச் சேர்ந்த 30 எம்பிக்கள், அதிமுகவின் 4 எம்பிக்கள், பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் தலா ஒரு எம்பிக்கள் என 37 எம்பிக்கள் புறக்கணித்தனர்.