சென்னை, செப். 22-
சினிமாவுக்கு பிளாக்கில் டிக்கெட் விற்பனை போல் மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் தவெகவினர் பாஸ் விற்பனை செய்து கொண்டிருந்ததாக வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். தனது ஆட்சி வரும் போது தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை என்ற அமைப்பே இருக்காது என்றும் கூறியுள்ளார்.
மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் நடந்த குளறுபடிகள் தொடர் விவாதமாகி இருக்கிறது. குறிப்பாக விஐபி பாஸ்களை தவெகவினர் விற்பனை செய்ததாக மக்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். ரூ.2,500 முதல் ரூ.25,000 வரை பாஸ்கள் விற்பனை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதேபோல் கோபுரம் அருகில் கூட மக்கள் அனுமதிக்கப்படவில்லை.
குடமுழுக்கு பூஜை செய்யப்பட்ட புனித நீர் கூட பக்தர்கள் மீது தெளிக்கப்படவில்லை. இந்த நிலையில் மதுரை வந்த வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை பேசுகையில், வீ தி லீடர்ஸ் அமைப்பில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். அனைத்து மதத்தினரும் இருக்கின்றனர். நாம் ஆட்சிக்கு வரும் போது மட்டும்தான், அறநிலையத்துறை எடுப்போம்.
அதில் உறுதியாக தெளிவாக இருக்கிறோம். காரணம், மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு சாட்சி. 17 ஆண்டுகளுக்கு பின் நடந்த குடமுழுக்கு விழாவின் பாஸ்களை சினிமா டிக்கெட் போல் தவெக ஆட்சியில் பிளாக் டிக்கெட் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். விஐபி மட்டுமே அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். மாட வீதிகளில் விஐபி வாகனங்கள் பார்க் செய்யப்பட்டிருந்தது.
தீர்த்தம் யாருக்கும் தெளிக்கப்படவில்லை.. மீதமுள்ள நபர்கள் மீது தெளிக்கப்பட்டது தீர்த்தம் அல்ல.. அது தண்ணீர்.. காவல்துறை அதுக்கு தான் இருக்கிறார்களா? சினிமா தியேட்டரில் செல்ஃபோன் டார்ச் அடிப்பது எனக்கு பிரச்சனையாக உள்ளது. அதனால் அனைவரின் செல்போனையும் பிடுங்கிவிடலாமா? அதேபோல் கோயிலில் அனைவரின் செல்போனையும் பிடுங்கிவிடுகிறார்கள்.. இது நியாயமா?
இது இந்துக்களுக்கு சிக்கலாக அமைந்துள்ளது. எல்லோருக்குமான இயக்கமாக நாம் இருக்கிறோம். அனைத்து மதத்தினரையும் சமமாக பார்க்க வேண்டும். சட்டசபையில் அமர்ந்து பைபிள் படித்தேன் என்கிறார். சட்டசபையில் பேச வேண்டிய விஷயமா இது? சபாநாயகர் தொடங்கி அனைவரும் தாம் எந்த மதம் என்று காட்டுவதில் போட்டி போட்டு கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்