மதுரை, அக். 17-

மதுரை மாநகராட்சி குடிநீர் மற்றும் கழிவுநீர் நீரேற்று நிலையங்களில் முறை கேடுகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

மாநகராட்சி கழிவு நீரேற்று நிலையங்களில் கடந்த 5 ஆண்டுகளாக லேபர் காண்ட்ராக்ட் எடுத்து தனியார் நிறுவனம் பல்வேறு ஊழல்களை செய்து வருகிறது. லேபர் காண்ட்ராக்ட் மட்டுமின்றி அதே நிறுவனம் அங்கு வேலை செய்யும் அலுவலர்கள் மூலம் மோட்டார் பழுது மற்றும் டிரான்ஸ்பார்மர் பழுது, சென் செட் பழுது, பேனல் போர்டு பழுது, மண் அள்ளுதல் உள்ளிட்ட பணிகளையும் செய்கின்றனர்.

குடிநீர் நீரேற்று நிலையங்களிலும் அதிகளவில் முறைகேடுகள் நடக்கிறது. இங்கும் 3 நபர்கள் ஊழல் செய்கின்றனர். அந்த 3 நபர்களும் முறைகேடுகள் மூலம் ஏராளமான சொத்துக்கள் வாங்கி குவித்து உள்ளனர். மேலும் முன்னாள் தலைமை பொறியாளர்கள், பொறியாளர்கள் சிலரின் துணையுடன் சில தனியார் நிறுவனங்கள் லேபர் காண்ட்ராக்ட் மற்றும் பழுது நீக்கும் ஒப்பந்தங்கள் மூலம் ஊழல்கள் நடந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் கழிவு நீரேற்று நிலையம் மற்றும் குடிநீரேற்று நிலையங்களில் நடைபெற்ற பணிகளை முறையாக ஆய்வு செய்தால் ஊழல்கள் அம்பலமாகும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.