மதுரையில் அமைக்கப்பட்டுள்ள வேலம்மாள் கிரிக்கெட் மைதானத்தில் நடிகர்கள், நட்சத்திரங்கள் விளையாடும் செலிபிரிட்டி பிரீமியர் லீக் தொடர் 3 நாட்களுக்கு நடத்தப்பட உள்ளது.

சில மாதங்களுக்கு முன் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் டோனி திறந்து வைத்தார். இந்த மைதானம் தென் மாவட்ட இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. சர்வதேச தரத்தில் பிட்ச், மின் விளக்குகள், வீரர்களுக்கான ஓய்வறைகள், டிஜிட்டல் ஸ்கோர் போர்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே போல் வலைப்பயிற்சி கூடம், 15 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள், நவீன வடிகால் வசதி மற்றும் ஒளிபரப்புக்காக 197 கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

சேப்பாக்கம் மைதானத்திற்கு பின் தமிழகத்தின் 2-வது பெரிய மைதானமாக மேலம்மாள் கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ளது. இதனால் தென் மாவட்ட மக்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டது. விரைவில் டி.என்.பி.எல் போட்டிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வேலம்மாள் மைதானம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் இணைக்கப்படவில்லை என்று தெரிய வந்தது. இதனால் மதுரை மாவட்ட மக்கள் சோகம் அடைந்தனர்.

இந்த நிலையில் நடிகர்கள் விளையாடும் செலிபிரிட்டி பிரீமியர் லீக் தொடர் வேலம்மாள் மைதானத்தில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 23, 24, 25 ஆகிய 3 நாட்களில் 6 போட்டிகள் நடத்தப்பட உள்ளது. பெங்கால், கேரளா, பஞ்சாப், தெலுங்கு, கர்நாடகா, சென்னை, போஜ்பூரி ஆகிய 6 மாநிலங்களைச் சேர்ந்த நடிகர்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இதில் தமிழ் நடிகர்கள் ஆடும் 2 போட்டிகளில் வேலம்மாள் மைதானத்தில் நடக்கவுள்ளது.

இதனால் மதுரை மண்ணிலேயே தங்களின் ஆஸ்தான திரை நட்சத்திரங்களை ரசிகர்கள் காணும் வாய்ப்பு அமைந்துள்ளது. அதே போல் வேலம்மாள் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் முக்கியமான தொடர் என்பதால், மதுரை மக்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதனால் அதிகளவில் ரசிகர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.